தனது தொகுதியில் உள்ள கெங் கூன் சீனப்பள்ளியில், 16 கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து, பத்து காவான் எம்.பி. கஸ்தூரி பட்டு பள்ளி மூடல் கொள்கையைத் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
15 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் சம்பந்தப்பட்ட நேர்மறையான வழக்குகள் இருந்தபோதிலும், அப்பள்ளி இன்னும் திறந்திருக்கிறது. முன்பு, 1 பாதிப்பு கண்டறியப்பட்டாலும் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது, ஆனால் தற்போது அந்நிலை மாறியிருப்பதாகவும் கஸ்தூரி கூறினார்.
“பள்ளி மற்றும் தென் செப்ராங் பிறை மாவட்டக் கல்வி அலுவலகத்துடன் தொடர்புகொண்டபோது, 15 மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் கோவிட் -19 நோய்க்கு இலக்காகியுள்ளது கண்டறியப்பட்ட போதிலும், பள்ளியை மூட வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளனர்.
“இது கவலை அளிக்கிறது, ஏனெனில் இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், கோலத் திரெங்கானுவில் உள்ள சுல்தான் சுலைமான் 1 தேசியப் பள்ளியில், எட்டு மாணவர்களுக்குச் சோதனை முடிவுகள் நேர்மறையாக வந்த பின்னர், 14 நாட்களுக்குப் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது,” என்று அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி, மலாக்கா, டுரியான் டாவுனில் உள்ள துன் ஃபாத்திமா ஆறாம் படிவக் கல்லூரியில், ஓர் ஆசிரியருக்கு நேர்மறையான முடிவு வந்ததை அடுத்து அக்கல்லூரி மூடப்பட்டதையும் அவர் எடுத்துரைத்தார்.
பள்ளி மூடல் உத்தரவு, மாநில அல்லது மாவட்டச் சுகாதாரத் துறையிலிருந்து மாவட்டக் கல்வித் துறைக்கு வருவதாகத் தெரிகிறது, பின்னர் பள்ளியை மூட உத்தரவிடப்படும்.
“கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் தாங்கள் பின்பற்றும் பள்ளி மூடல் கொள்கையில் வெளிப்படையாக இருக்க வேண்டும், கடந்த காலங்களில் கோவிட் -19 காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டன, ஒருவர் மட்டுமே நேர்மறையானவராக இருந்தாலும் கூட,” என்று அவர் வலியுறுத்தினார்.
“பள்ளி மூடல்களுக்கான வழிமுறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதையும், பள்ளிகள் மற்றும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் இரு அமைச்சுகளும் சீராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
“நேர்மறையானப் பாதிப்புகளைக் கண்டறிந்த போதிலும், பள்ளிகளை மூட உத்தரவிடுவதில் தாமதம் ஏற்படுவதால், பள்ளிகளில் அதிகமான குழந்தைகள், ஆசிரியர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் பிறத் தொழிலாளர்கள் தொற்றுநோயால் பாதிப்படைய அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
பினாங்கில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், குறிப்பாக செயலில் உள்ள திரளைகள் கொண்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கஸ்தூரி மேலும் வலியுறுத்தினார்.