நாடாளுமன்ற இடைநீக்கம் தொடர்பான விவகாரத்தில், இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு “தவறானது” என்பதைக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சி வாதிடுகிறது.
இன்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
அன்வர் கூற்றுப்படி, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அவசரகாலத்தில் நாடாளுமன்ற அமர்வைத் தடுக்கவில்லை, அவர் பிரதமரின் முடிவுக்காக மட்டுமே காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
“நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நிறுவனங்களின் விதிகள் நமக்குத் தெரிந்திருந்தால், அகோங் அத்தகையக் கருத்தை அளிக்கும்போது, நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் பார்வை தவறானது என்பதற்கான தெளிவை அது தருகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவரான அன்வர், எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் பல்வேறு விஷயங்களை விவாதிக்க ஒரு சந்திப்பை நடத்தினார்.
பொருளாதார மற்றும் சமூகத் துறைகள் ஒவ்வொன்றாக மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட போதிலும், பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் நாடாளுமன்ற அமர்வை தொடர்ந்து ஒத்தி வைத்து வருகிறது.
பதிவைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற அமர்வு விரைவில் வேண்டும் எனும் வற்புறுத்தல் எதிர்க்கட்சி மட்டுமின்றி, பல அம்னோ தலைவர்களிடம் இருந்தும் வருகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்று இஸ்தானா நெகராவின் கருத்தைத் தெரிவிக்க, அகோங் முன்பு ஓர் அறிக்கையையும் வெளியிட்டார், அதைச் செயல்படுத்த முஹைதீனின் ஆலோசனைக்காக அகோங் காத்திருக்கிறார்.
அமைச்சரவை நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட விரும்புகிறது என்பதற்கான அறிகுறியே இல்லை. உண்மையில், நேற்று, பிரதமர் திணைக்கள அமைச்சர் தக்கியுதீன் ஹாசன் தற்போதைய நாடாளுமன்ற இடைநீக்கத்திற்கு, 1969-ம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் இரண்டு ஆண்டுகள் நாடு அவசரகால நிலையில் இருந்தபோது, நாடாளுமன்றம் அமரவில்லை என்று ஒரு நியாயத்தை வழங்கினார்.
அவசரகால நிலையை அறிவிக்க நியாயமான அடிப்படை இல்லை என்று இன்றையக் கூட்டம் உணர்ந்தது என்றும் அன்வார் தெரிவித்தார்.