ஹஸ்னுல் : `பி.கே.ஆரைச் சந்தித்தேன், ஆனால் ‘புதிய கட்சி ஒன்றைத் தேடவில்லை’

பேராக் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனைம், கடந்த டிசம்பரில் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்சியைத் தேடுகிறார் என்ற கூற்றை மறுத்தார்.

தனது அரசியல் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்றார் அவர்.

“நான் அரசியலில் இருக்கும் எனது நண்பர்கள் அனைவரையும் சந்தித்தேன், அதில் அம்னோ, அமானா மற்றும் பி.கே.ஆர். கட்சிகளைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

“ஆனால், நான் இப்போது எந்தக் கட்சியிலும் சேர விரும்பவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

தித்தி செரோங் சட்டமன்ற உறுப்பினரான அவர், பி.கே.ஆரில் சேர விரும்புவதாக வெளியான வதந்திகள் குறித்து கருத்து கேட்கப்பட்டபோது இதைக் கூறினார்.

முன்னதாக, ஒரு பேராக் பி.கே.ஆர். வட்டாரம், ஹஸ்னுல் அக்கட்சியின் பல தலைவர்களைச் சந்தித்து, அவர்களுடன் சேர விருப்பம் தெரிவித்ததாக மலேசியாகினியிடம் கூறினார்.

இருப்பினும், அது பொதுவான ஒரு சந்திப்புதான் என்று ஹஸ்னுல் தெரிவித்தார்.

“இப்போதைக்கு, எனது பகுதியில் கவனம் செலுத்துகிறேன்.

“நான் ஒரு புதியக் கட்சியைத் தேடவில்லை. நாட்டின் அரசியல் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

“மக்கள் ஆணைக்கு துரோகி” என்று விவரிக்கப்பட்ட ஒருவரைக் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பேராக் பி.கே.ஆர். தகவல் பிரிவுத் தலைவர் முஹம்மது அராஃபாட் வாரிசாய் மஹமட் முன்னர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த துரோகத்தை மக்கள் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

“நாங்கள் ஒருமைப்பாடு மற்றும் கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கிறோம். எனவே, பேராக் பி.கே.ஆரில் மக்கள் ஆணை துரோகிகளுக்கு இடமில்லை,” என்று அவர் கூறினார்.

முன்னாள் அமானா இளைஞர் பிரிவு தலைவரான ஹஸ்னுல், கடந்த மார்ச் மாதம் பெர்சத்துவுடன் சேர்ந்தார், இது பேராக்கில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததற்கு ஒரு காரணம்.

எவ்வாறாயினும், 2020 டிசம்பரில் அவர் பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்டார். அம்னோ தலைவர் சாரணி மொஹமட்டுக்கு ஆதரவாக வாக்குமூலத்தில் (எஸ்டி) கையெழுத்திட்டதை அடுத்து, பெர்சத்து துணைத் தலைவரான அஹ்மத் பைசல் அஸுமுவுக்குப் பதிலாக சாரணி பேராக்கின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஹஸ்னுல் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அக்கட்சியின் (பேராக்) செயலாளர் ஜைனோல் ஃபட்ஸி உறுதிப்படுத்தினார்.