கடந்த ஆண்டு, 22 சீன நாட்டினரை விடுவிக்க உதவுவதற்காக RM300,000 தொகை கையூட்டு கோரிய குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என்று ‘டத்தோ ஶ்ரீ’ பட்டம் கொண்ட ஒரு தொழிலதிபர் இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறினார்.
முதல் குற்றச்சாட்டின் படி, 22 சீன நாட்டினரை அரச மலேசியக் காவல்துறை மற்றும் குடிநுழைவு துறை (ஜிஐஎம்) காவலில் இருந்து விடுவிக்க, 45 வயதான முகமது அல் பைசல் முகமது, தொழிலதிபர் லிம் செங் சாய், 41, என்பவரிடமிருந்து RM300,000 கையூட்டு பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இரண்டாவது குற்றச்சாட்டில், அவர்களை போலிஸ் மற்றும் ஜிஐஎம் காவலில் இருந்து விடுவிக்க உதவும் ஒரு தூண்டுதலாக லிம் நிறுவனத்திடமிருந்து RM176,000 பணத்தை ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் முகமது அல் பைசல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்,
2020 செப்டம்பர் 22, இரவு 9.30 மணிக்கு, ஜாலான் டுவா, கம்பாங் பாரு சுபாங், பெட்டாலிங்கில் உள்ள ஓர் உணவகத்தில் அக்குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(A) மற்றும் அதேச் சட்டத்தின் பிரிவு 24 (1)-இன் கீழ், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தண்டமாக கையூட்டு பெற்ற பணத்தைவிட 5 மடங்கு குறையாத தண்டம் அல்லது RM10,000 அல்லது எது அதிகமோ அது விதிக்கப்படும்.
முகமது அல் பைசலுக்கு RM100,000 ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிபதி ரோசிலா சல்லே தீர்ப்பளித்தார்.
வழக்கறிஞர் டி தமிழ் சல்வன் மற்றும் பெனடிக்ட் ஆனந்த் ஆகியோரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் ஆஜர் செய்ய அறிவுறுத்தப்பட்டார், மேலும் அவரது கடப்பிதழ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
எதிர்வரும் ஏப்ரல் 21 அன்று வழக்கு மீண்டும் குறிப்பிடப்படும்.
முன்னதாக, நேற்று நடத்தப்படவிருந்த வழக்கு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கலந்துகொள்ளத் தவறியதால், முகமது அல் பைசலுக்கு எதிராக திங்களன்று வழங்கப்பட்ட கைது ஆணையையும் ரோசிலா இரத்து செய்தார்.
- பெர்னாமா