‘அம்னோ-பி.கே.ஆர். ஒத்துழைப்பு இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது’

கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு பிரச்சினை இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும், அதை பல்வேறு வடிவங்களில் மொழிபெயர்க்கலாம் என்றும் பி.கே.ஆர். உதவித் தலைவர் சாங் லி காங் கூறினார்.

“ஒத்துழைப்பு பல வடிவங்கள் உள்ளன. அம்னோ பி.எச்.- உடன் (பக்காத்தான் ஹராப்பான்) இணைந்தாலும் அல்லது பி.கே.ஆர். தேசிய முன்னணியுடன் (பி.என்.) இணைந்தாலும் அதே அரசியல் கூட்டணியில் ஒத்துழைப்பு உள்ளது. அது ஒரு வடிவம்.

“இரண்டாவதாக, இருக்கை விநியோகம், தேர்தல் ஒப்பந்தம் போன்றவற்றில் நாம் ஒத்துழைக்க முடியும். பல வகையான ஒத்துழைப்புகள் உள்ளன, ஆனால் நாங்கள் அந்த நிலையை இன்னும் எட்டவில்லை.

“நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களின் நோக்கங்களைச் சோதித்து வருகிறோம்,” என்று சினார் ஹரியான் தொகுத்து வழங்கிய ‘பி.கே.ஆர்-அம்னோ ஒத்துழைப்பின் நிதர்சனம்’ என்ற பேச்சு மன்றத்தில் சாங் கூறினார். இந்நிகழ்ச்சி முகநூலில் நேரடியாக வெளியிடப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் பி.என். தகவல் பிரிவுத் தலைவர் இஷாம் ஜலீல் மற்றும் அரசியல் ஆய்வாளர் முகமது தவ்ஃபிக் யாகுப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பி.கே.ஆருக்கும் அம்னோவிற்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்புக்கான விவாதத்தைக் கார்ப்பரேட் ஒத்துழைப்புடன் சாங் ஒப்பிட்டார்.

“கார்ப்பரேட்டில் ஒரு நோக்கக் கடிதம் உள்ளது, ஒரு செயல்முறை உள்ளது, பின்னர் நாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம், அதன்பின்னரே ஒரு முறையான ஒப்பந்தம் உள்ளது.

“பி.கே.ஆர். அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்ற வார்த்தைக்கு நாம் குதிக்கத் தேவையில்லை, அம்னோ பி.கே.ஆருடன் ஒத்துழைக்க விரும்புகிறது, யார் பிரதமராக இருப்பார்… அதெல்லாம் இன்னும் இல்லை, ஏனென்றால் இது ஆரம்பக் கட்டம்தான், இது மிக மிக ஆரம்பக் கட்டம்,” என்று அவர் கூறினார்.

“இப்போது நாங்கள் அம்னோவிடம் கேட்க விரும்புகிறோம், பெர்சத்து-உடனான ஒத்துழைப்பை நீங்கள் விரும்புகிறீர்களா? ஹா… இல்லை.

“தேசியக் கூட்டணியின் (பிஎன்) மாதிரி திட்டம் நாட்டிற்கு நன்மைகளைத் தருமா என்று நாம் கேட்கிறோம்? இல்லை. அடுத்த ஜி.இ.யில் வெல்ல வேண்டுமா என்று நாம் கேட்கிறோம்? ஆம். பின்னர் நாங்கள் மேலும் விவாதிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

கட்சித் தலைவர்களுக்கு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க இடம் திறக்கப்பட வேண்டும் என்று தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினரான சாங் கூறினார்.

“நாட்டிற்கு நமக்கு ஒரு புதிய அரசியல் சீரமைப்பு தேவைப்படும் ஒரு கட்டத்தை நாம் எட்டியுள்ளோம், நமக்கு விவாதங்கள் தேவை.

“ஷெரட்டன் நடவடிக்கை போன்ற அரசியல் ஒத்துழைப்பை நாங்கள் செய்தால், அது சிக்கலானதாக இருக்கும், ஏனெனில் எந்த விவாதமும் இல்லை, சம மதிப்பும் இல்லை,” என்ற அவர், கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைக் குறிப்பிட்டு பேசினார்.

இதற்கிடையில், இரு கட்சிகளும் ஒரே மதிப்புகளையும் போராட்டங்களையும் பகிர்ந்து கொள்கிறதா என்பதுதான் ஒன்றாக வேலை செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன்பு தீர்மாணிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்று இஷாம் வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு ஒத்துழைப்பிலும், அந்த ஒத்துழைப்பின் நோக்கம் என்னவென்று நாம் கேட்கிறோம்? எல்லாமே நோக்கத்துடன் தொடங்குகிறது. நாம் ஒரு போராட்டத்தில் இருந்தால், ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நாம் எதற்காகப் போராடுகிறோம்?

“இரண்டாவது, கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நல்லொழுக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் ஒற்றுமையைத் தேட வேண்டும். நாம் ஒத்துழைப்பை விரும்பி ஆனால் அடிப்படையில் மதிப்பும் நல்லொழுக்கமும் இல்லையென்றால் எந்த ஒற்றுமையும் இருக்காது, இது கடினம். அதனால்தான் ஆரம்பத்தில் நான் ஷெராட்டன் நடவடிக்கைக்கு உடன்படவில்லை.

“சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பு, வெற்றி பெறாது,” என்று அவர் கூறினார்.

‘அன்வர் பிரதமராக வருவதற்கு அடிமட்டம் உடன்படவில்லை’

அன்வர் இப்ராஹிம் உட்பட எந்தவொரு நபரையும் பிரதமராக உயர்த்தப் பாடுபடுவது அம்னோவின் போராட்டம் அல்ல என்று அவர் கூறினார்.

“அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பினால், அன்வர் பிரதமராக இருக்க முடியாது என்பதே நிபந்தனை என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் அன்வர் பிரதமராவதை, அம்னோ அடிமட்ட மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான், மற்ற கதைகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பு நான் இதனைக் கூறினேன்.

“இந்தச் சிக்கலைப் பி.கே.ஆரால் தீர்க்க முடியும் என்றால்… எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாது. ஆனால் ஒத்துழைப்பின் நோக்கம் ஒருவரைப் பிரதமராக நியமிப்பது மட்டுமே என்றால், அது நடக்காது, ஏனெனில் எங்கள் நோக்கம் வேறுபட்டது.

“நாங்கள் அதைக் கட்டாயப்படுத்தினால், இப்போது பெர்சத்துவுடன் ஒத்துழைக்கும்படி கட்டாயப்படுத்தும் நபர்கள் இருக்கிறார்கள், அது முடியாது… வாக்குகள் பிளவுபட்டு போகும்,” என்று அவர் கூறினார்.

மார்ச் 16-ம் தேதி, அம்னோவுடன் கட்சியின் ஒத்துழைப்பு இன்னும் ஆரம்பக் கட்ட விவாதங்களில் உள்ளது என்றும் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை என்றும் அன்வர் தெரிவித்தார்.

இருப்பினும், சில அம்னோ எம்.பி.க்கள் ஒத்துழைப்பு என்றக் கருத்தை ஆதரித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.