‘300 முன்னாள் பி.கே.ஆர். உறுப்பினர்கள் கெராக்கானில் இணைந்தனர்’

தலைமைக்கான உள்போராட்டத்தில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் மக்களின் நலன்களைப் புறக்கணித்தல் காரணமாக, பி.கே.ஆர். ஈப்போ பாராட் கிளையைச் சார்ந்த 300 உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி, கெராக்கானில் சேர்ந்தனர்.

பேராக் கெராக்கான் தலைவர் சீ தியான் செங், ஒரு வருடத்திற்கு முன்பு பி.கே.ஆரை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள், இப்போது கெராக்கானில் இணைய உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கியதாகத் தெரிவித்தார்.

“இதுவரை, ஈப்போ பாராட்டைச் சேர்ந்த மொத்தம் 300 முன்னாள் பி.கே.ஆர் உறுப்பினர்கள் எங்களுடன் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த எண்ணிக்கையில், சுமார் 50 உறுப்பினர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. எங்கள் மதிப்பாய்வில் இன்னும் அப்படிவங்கள் உள்ளன.

“அவர்களின் உறுப்பினர் பாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், எங்கள் போராட்டம் குறித்த தகவல்களை நாங்கள் அவர்களுக்கு வழங்குவோம்,” என்று அவர் இன்று, ஈப்போ விஸ்மா கெராக்கானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதற்கிடையில், முன்னாள் பி.கே.ஆர். ஈப்போ பாராட் உறுப்பினர்கள் குழுவின் பிரதிநிதி, அல்பைசல் ஷாஹுல் ஹமீத், 44, 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு, பி.கே.ஆர். தலைமையில் அடிக்கடி நிகழும் அதிகாரப் போராட்டத்தின் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

“அவர்களின் போராட்டம் சுயநலமானது, மக்களுக்காக அல்ல. எனவே, கட்சியை விட்டு வெளியேற நானும் மற்ற உறுப்பினர்களும் முடிவு செய்தோம்,” என்று அவர் அதே செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

– பெர்னாமா