இந்த விவகாரத்திற்காக வக்கீல்களுக்கு அரசாங்கம் பெரும் பணம் செலுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அகற்ற, கோல்ட்மேன் சாச்ஸுடனான மில்லியன் கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட தீர்வு குறித்து பிரதமர் முஹைதீன் யாசின் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால், முஹைதீனின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாது என்று டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறினார்.
“இந்த விஷயத்தில் எழுந்திருக்கும் சந்தேகங்களை முடிவுக்குக் கொண்டுவரப் பிரதமர் மௌனம் காப்பதை நிறுத்த வேண்டும்.
“அவரது அரசாங்கம் ஓர் உடன்படிக்கைக்குக் (என்.டி.ஏ) கையெழுத்திடலாம் – தேவையில்லை என்றாலும் – கோல்ட்மேன் சாச்ஸுடன் ஒரு தீர்வை எட்ட, ஆனால் 1எம்.டி.பி. வக்கீல்களுக்குச் செலுத்தும் பணம் என்.டி.ஏவில் சேர்க்கப்படவில்லை, எனவே அவற்றைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தலாம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, கோல்ட்மேன் சாச்ஸுடனான தீர்வுக்கு உயர் சட்டக் கட்டணங்கள் வழங்கியதில், கட்சிக்கும் ஒரு “கமிஷன்” கிடைத்ததாகக் கூறப்பட்டதை பெர்சத்து கடுமையாக மறுத்தது.
குவாங் சட்டமன்ற உறுப்பினர் சல்லேஹுடின் அமிருட்டின் அலுவலகம் தாக்கல் செய்த போலிஸ் அறிக்கையைப் பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கண்டித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முஹைதீனின் நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்கும் முயற்சி என்று அவர் விவரித்தார்.
முன்னர் பெர்சத்து உறுப்பினராக இருந்த சல்லேஹுட்டின், இப்போது டாக்டர் மகாதீர் மொஹமட் நிறுவிய பெஜுவாங் கட்சியில் இருக்கிறார்.
நேற்று, முஹைதீனுக்கு நெருக்கமான வழக்கறிஞர் ரோஸ்லி டஹ்லான், இந்த விவகாரம் தொடர்பாக சல்லேஹுட்டின் மற்றும் முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் ஆடம் ஆகியோருக்கு எதிராக போலிஸ் புகாரைப் பதிவு செய்தார்.
முன்னதாக லோக்மானும் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
புவா அத்தகையக் குற்றச்சாட்டுகள் “குழப்பமானவை” என்று விவரித்தார், மேலும் இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்றும் கூறினார்.
“எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூகத்தின் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், கோட்ல்மேன் சாச்ஸுடனான உடன்படிக்கையின் நிபந்தனைகளை வெளியிட முஹைதீன் அரசாங்கம் தயக்கம் காட்டுவது திருப்தியற்றது.
“அவ்வாறு செய்யத் தவறினால், நஜிப்பின் மரபு போன்ற முஹைதீனின் மரபுக்குக் களங்கம் ஏற்படும்.
“கோல்ட்மேன் சாச்ஸிடமிருந்து பல போராட்டங்களுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்ட நிதி – பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நிர்வாகத்தின் போது தொடங்கிய ஒரு செயல்முறை – நஜிப்பின் ஊழலால் உருவான 1எம்டிபி-இன் பெரும் கடன்களை அடைக்கவும், இப்போது பெர்சத்து மற்றும் முஹைதீனின் அரசியல் நலன்களுக்கும் பயனளிப்பதாகத் தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.
பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) தக்கியுட்டின் ஹசான், மலேசியா ஓர் இரகசிய விதிமுறைக்குக் கட்டுப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், 1எம்டிபி-க்கு 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மூன்று பத்திரங்களை ஏற்பாடு செய்வதற்கு கோல்ட்மேன் சாச்ஸ் பொறுப்பேற்றது. பின்னர், அந்த நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது.
1எம்டிபி ஊழலில், கோல்ட்மேன் சாச்ஸ் தரப்பு பங்கு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் பொதுவாக அந்த அமெரிக்க வங்கி 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் (RM10.35 பில்லியன்) செலுத்த வேண்டும்; கூடுதலாக 1எம்டிபி நிதியைப் பயன்படுத்தி பெறப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (RM5.8 பில்லியன்) உத்தரவாதம் அளிக்க வேண்டும்.