மசீச : ‘யானையும் யானையும்’ மோதிக்கொள்வதை நிறுத்த வேண்டும்

கெடா மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் தான் சீ ஹியோங், கெடா மற்றும் பினாங்கு மாநில அரசாங்கங்கள், நீர் பிரச்சினைகள் தொடர்பாக வாதிடுவதை நிறுத்திவிட்டு, இரு மாநில மக்களின் நலனுக்காக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சந்தித்து பேச வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பதிலடி கொடுக்கும் நடவடிக்கை பிரச்சினையை மிகவும் சிக்கலானதாக மாற்றும் என்றும், இறுதியில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

“மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டால், அதனால் உருவாகும் கஷ்டங்களுக்கு மக்கள் பலியாவார்கள்,” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

பினாங்கின் 80 விழுக்காடு நீர் தேவைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் சுங்கை முடாவில், ஒரு நீர்த்தேக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் இருந்து கெடாவைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பும் பினாங்கு முதல்வர் சோவ் கோன் இயோவின் அறிக்கையை அவர் மேற்கோளிட்டுள்ளார்.

இது இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட முதல் தகராறு அல்ல என்று தான் கூறினார்.

இதற்கு முன்னர், பினாங்கு சர்வதேச விமான நிலையத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் கூலிம் விமான நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக இரு மாநிலங்களிடையேயும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயால் மக்கள் போராடி வரும் நிலையில், மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகளை இன்னும் அதிகரிக்கக்கூடாது என்றார் அவர்.

சமீப காலமாக, கெடா, சுங்கை முடா சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களுக்கிடையில் நீர் வழங்கல் பிரச்சினைகள் குறித்து, சோவ் மற்றும் கெடா மந்திரி பெசார் சனுசி இருவரும் பல பதிலடி அறிக்கைகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.