ஜிஇ15 வரை பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு – அம்னோவின் முடிவுக்கு இஸ்மாயில் கட்டுப்படுகிறார்

தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பெர்சத்துவுடனான உறவுகள் தொடர்பில் கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுவதாகக் கூறினார்.

இதன் பொருள், அரசாங்கத்திற்கும் பிஎன் கூட்டணிக்கும் தலைமை தாங்கும் அம்னோ – பெர்சத்து இடையிலான ஒத்துழைப்பு, ஜிஇ15-ல் முடிவடையும்.

“இன்று அரசாங்கத்தில் இருக்கும் எங்கள் அமைச்சர்களும் எம்.பி.க்களும், தேர்தல் வரை தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருவார்கள்,” என்று அவர் நேற்று அம்னோ ஆன்லைன்னுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“அடுத்ததாக உச்சமன்ற முடிவு என்னவென்றால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது எங்களுக்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தீர்மானிக்கப்படும், இது தெளிவானது.

“உச்சமன்றத்தின் முடிவில், யாரும் தகராறு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது, இஸ்மாயில் சப்ரி பாதுகாப்பு அமைச்சராகவும், அமைச்சரவையில் உள்ள நான்கு மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளார்.

எவ்வாறாயினும், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா இந்த நிலைப்பாட்டிலிருந்து வேறுபடுகிறார், அவர் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு அம்னோவுக்குப் பயனளிக்கும் என்று வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், பி.கே.ஆர். மற்றும் டிஏபி குறித்த கட்சியின் நிலைப்பாடும் தெளிவாக உள்ளது என்று இஸ்மாயில் கூறினார்.

“பி.கே.ஆர். இல்லை, டிஏபியும் இல்லை”. இதுவும் உச்சமன்றத்தின் முடிவு, நேற்று அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது அறிக்கையில் இதனை வலியுறுத்தினார், தேர்தலை எதிர்கொள்ள அம்னோ பி.கே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தாது, தேர்தலுக்குப் பிறகும் அதுதான் எங்கள் முடிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்த வார இறுதியில் அம்னோ பொதுகூட்டத்திற்கு முன்னதாக இஸ்மாயிலின் அறிக்கை வந்துள்ளது, பெர்சத்து மற்றும் பாஸ் உடனான உறவுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல பி.கே.ஆர். மற்றும் அம்னோ தலைவர்களிடையே ஆரம்ப விவாதங்கள் இருப்பதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் முன்பு கூறியிருந்தார்.

இருப்பினும், அம்னோ தலைவர்கள் எவருக்கும் பி.கே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் இல்லை என்று ஜாஹித் கூறினார்.