2020-ல், மகாதீருக்கு எதிரான கத்தி குத்து முயற்சியைப் புக்கிட் அமான் முறியடித்தது

அரசாங்கத்தின் பல முக்கியத் தலைவர்கள் மீது, தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் ஒருவரைப் புக்கிட் அமான் பயங்கரவாதச் சிறப்பு கிளை (இ8) கைது செய்தது.

இ8 உதவி இயக்குநர் அஸ்மான் ஒமர் கூறுகையில், இந்த நபர் 2020 ஜனவரியில் கைது செய்யப்பட்டார், அவர் டாக்டர் மகாதிர் மொஹமட், லிம் குவான் எங், முஜாஹித் யூசோப் மற்றும் தோமி தாமஸ் ஆகியோரைத் தாக்க முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.

அப்போது, மகாதீர் பிரதமராகவும், லிம் நிதி அமைச்சராகவும், முஜாஹித் பிரதமர் துறையில் அமைச்சராகவும், தாமஸ் சட்டத்துறை தலைவராகவும் இருந்தனர்.

இருப்பினும், ஷெரட்டன் நகர்வு காரணமாக, பி.எச். அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் பின்னர் அரசாங்கப் பொறுப்புகளில் இருந்து விலகினர்.

ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவுக்குத் தனது ஆதரவைக் காட்ட, இந்த நபர் தாக்குதலைத் தொடங்க விரும்பியதாக அஸ்மான் கூறினார்.

“ஜனவரி 6 முதல் 7 வரை, நாங்கள் ஓர் உள்நாட்டினரையும் அவருடன் மேலும் 5 பேரையும் கைது செய்தோம்… அவர்கள் ஐ.எஸ். பிரச்சார வீடியோக்களைத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததோடு, நாட்டின் தலைவர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல்களுக்கும் காரணமாக இருந்தனர்.

“விசாரணையின் போது, ​​(சம்பந்தப்பட்டவர்) ஐ.எஸ்.-க்கு ஆதரவளிக்கும் விதமாக, பல அரசாங்கத் தலைவர்கள் மீது கத்தி அல்லது கூர்மையான பொருள்களால் தாக்குதலை நடத்த இருந்ததை ஒப்புக்கொண்டார்,” என்று அவர் இன்று ஓர் இயங்கலை விவாதத்தில் கூறினார்.

கடந்த ஆண்டு, இ8 பிரிவு எழுவரைக் கைது செய்ததாகவும், சம்பந்தப்பட்டவர் அவர்களில் ஒருவர் என்றும் அஸ்மான் கூறினார்.

2019 மற்றும் 2018-ல் முறையே 72 மற்றும் 119 கைதுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றார் அவர்.

ஆனால், கைதுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி என்பது நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.

“கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் ஐ.எஸ். குழுவின் அனுதாபிகள் அல்லது ஆதரவாளர்கள் உட்பட அனைவருக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் அதிகாரிகளின் உதவியுடன் 2020 ஆகஸ்டில், சிங்கப்பூரில் பணிபுரிந்த மலேசியர் ஒருவரையும் இ8 கைது செய்ததாக அஸ்மான் சொன்னார்.

“அவர் போர்க்குணமிக்க நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதில் ஈடுபட்டிருந்தார், மேலும் ஐ.எஸ்.-இல் சேர்வதற்காக சிரியா செல்லவும் திட்டமிட்டிருந்தார்,” என்று அவர் கூறினார்.