கோவிட் -19 | இன்று அறிவிக்கப்பட்ட எட்டு புதியத் திரளைகளில், மூன்று கல்வி நிறுவனங்கள் தொடர்பானவை என்பதனால், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கைகள் எடுக்குமாறு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சுகாதார அமைச்சு நினைவூட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இதுபோன்ற 41 திரளைகள் இன்றுவரை பதிவாகியுள்ளன என்றும், இதுவரை 2,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
பெரும்பாலான பாதிப்புகள் (1,058; 47.5 விழுக்காடு) மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியது, இருப்பினும் அவை 41 திரளைகளில் 15 மட்டுமே.
இதைத் தொடர்ந்து 13 இடைநிலைப் பள்ளி திரளைகள் சம்பந்தப்பட்ட 631 பாதிப்புகளும் (28.3 விழுக்காடு), ஆரம்பப்பள்ளி மற்றும் பாலர் பள்ளிகள் சம்பந்தப்பட்ட 10 திரளைகளில், 419 பாதிப்புகளும் (18.8 விழுக்காடு) பதிவாகியுள்ளன.
மற்ற கல்வி நிறுவனங்கள் மூன்று திரளைகளைக் கொண்டுள்ளன, அவை சார்ந்த பாதிப்புகள் மொத்தம் 120 (5.4 விழுக்காடு).
“மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய, பாதுகாப்பான சூழலில் தொடர்ந்து கற்றல் கற்பித்தலைப் பின்பற்றுவதற்கான கல்வி அமைச்சின் உறுதிப்பாட்டைச் சுகாதார அமைச்சு வரவேற்கிறது.
“எனவே, சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் குறிப்பாக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், சிற்றுண்டிச் சாலை நிர்வாகிகள், பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் எப்போதும் செந்தர இயங்குதல் நடைமுறைகளையும் புதிய விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு நினைவூட்ட விரும்புகிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
பள்ளியில் உள்ளவர்களிடையே கோவிட் -19 பாதிப்புகள் பதிவாகும்போது, பாதிக்கப்பட்ட பள்ளிகளை மூடுவதைக் கல்வி அமைச்சு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் என்று நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.