எதிர்க்கட்சி எம்.பி. : தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது

‘வாக்கு 18’-ஐ (வாக்களிக்கும் வயது 18) அமல்படுத்துவதில் தாமதம் மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு காரணமாக, ஒன்பது எம்.பி.க்கள் பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் (இ.சி.) நேற்று பிற்பகல் எடுத்த முடிவு, மக்களவை மற்றும் செனட்சபைக்குப் பெரும் அவமானம் என்று அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் கூறினர்.

“தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

மத்திய அரசியலமைப்பின் பிரிவு 43 (3)-இன் அடிப்படையில், அமைச்சரவை கூட்டாக நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என அந்த எம்.பி.க்கள் கூறினர்.

எனவே, இசி-யின் நடவடிக்கை அமைச்சரவையின் தோல்வி என்று அவர்கள் கூறினர்.

“திருத்தத்திற்குக் கூட்டாக ஒப்புதல் அளித்த 211 எம்.பி.க்களில் முஹைதீன் மற்றும் தக்கியுடின் ஆகியோரும் உள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“எனவே, முஹைதீன் மற்றும் தக்கியுதீன் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இந்த அறிக்கையை வெளியிட்ட ஒன்பது எம்.பி.க்கள் ஃபஹ்மி ஃபட்ஸில் (லெம்பா பந்தாய் – பி.கே.ஆர்), ஸ்டீவன் சிம் (புக்கிட் மெர்தாஜாம் – டிஏபி), காலித் சமாட் (ஷா ஆலம் – அமானா), சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் (மூவார் – முடா), அஸிஸ் ஜம்மன் (செபங்கார் – வாரிசான்), முக்ரிஸ் மகாதிர் (ஜெர்லூன் – பெஜுவாங்), வில்ஃபெரட் மடியஸ் தங்காவ் (துவாரன் – உப்கோ), பாரு பியான் (சிலங்காவ் – பி.எஸ்.பி) மற்றும் மஸ்லீ மாலிக் (சிம்பாங் ரெங்கம் – சுயேட்சை).

நேற்று மாலை, தேர்தல் ஆணையம் ‘வாக்கு 18’-ஐ அமல்படுத்துவதையும், வாக்காளர்கள் சுயமாகப் பதிவு செய்வதையும் செப்டம்பர் 2022 வரை செயல்படுத்த முடியாது என்று அறிவித்தது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) தயாரிப்பு செயல்முறைக்கு இடையூறு விளைவித்ததாக இசி கூறியது.

இந்த ஜூலை மாதத்திற்குள், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) செயல்படுத்திய தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தக்கியுதீன் முன்னர் தெரிவித்திருந்தார்.

இசி-யின் நேற்றைய அறிவிப்பால், 18 முதல் 20 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 2023-ல் பொதுத் தேர்தல் (ஜி.இ) நடத்தப்பட்டால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

அதே நேரத்தில், ஜிஇ15 இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று பல தரப்பினர் கணித்துள்ளனர். தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி, குறைந்தது 21 வயதுடைய குடிமக்கள் மட்டுமே வாக்களிக்கும் தகுதி உடையவர்கள்.

இதற்கிடையில், அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்டான், இசியின் நடவடிக்கைக்கு உடன்படவில்லை என்று கூறினார்.

“நாங்கள் (அம்னோ) உடன்படவில்லை, ஏனெனில் முன்னதாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்ட (ஒப்புதல் அளிக்கப்பட்ட) இந்த விடயம் மதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.