2020-ஆம் ஆண்டில், நாட்டின் தலைவர்களைத் தாக்கும் திட்டம் இருந்ததைப் பற்றி முஹைதீன் யாசின் ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை மன்றம் நேற்று இரவு எழுப்பியது.
புக்கிட் அமான் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்திய திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல், முஹைதீன் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது நடந்தது என்று பி.எச். தலைமை மன்றம் நேற்றிரவு பிற்பகுதியில் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் கூறியுள்ளது.
அந்நேரத்தில், மலேசிய அமைச்சரவை – முஹைதீன் உட்பட – டாக்டர் மகாதீர் முகமது தலைமையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
“அந்த நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்த முஹைதீனின் அணுகுமுறையை எண்ணி நாங்கள் வருத்தப்படுகிறோம், இந்த விஷயத்தை பி.எச். தலைமை மற்றும் பொதுவாக மலேசியர்களுக்குத் தெரிவிக்க அவர் தவறிவிட்டார்.
“இது அந்த விஷயத்தின் உண்மையான நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட தலைவர்கள் மற்றும் பி.எச். அரசாங்கத்தின் கவனத்திலிருந்து மறைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளை எழுப்புகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பி.எச். தலைவரும், பி.கே.ஆர். தலைவருமான அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பல முக்கிய அரசாங்கத் தலைவர்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்த சிலரைப், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் சிறப்பு கிளை (இ8) கைது செய்ததாக புக்கிட் அமான் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அப்போது நிதியமைச்சராக இருந்த லிம், அமானா துணைத் தலைவர் முஜாஹித் யூசோப் மற்றும் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் ஆகியோரைத் தாக்க திட்டமிட்டதாக ஒப்புக் கொண்ட ஒருவரை, 2020 ஜனவரியில் கைது செய்ததாக இ8 உதவி இயக்குநர் அஸ்மான் உமர் கூறினார்.
இந்த முயற்சியைத் தடுக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு பி.எச். தலைமை மன்றம் நன்றி தெரிவித்தது.
இருப்பினும், அச்சுறுத்தலைப் பற்றி தெரிவிக்காத முஹைதீனின் அணுகுமுறை கேள்விக்குறியை எழுப்புகிறது என்றும் அது கூறியது.
“எனவே, இந்த விஷயத்தில் உடனடியாக விளக்கம் அளிக்குமாறு முஹைதீனை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.