அம்னோ தேசியத் தலைவர், அஹ்மத் ஜாஹித் ஹமிடி, தனது ஊழல் விசாரணையை உள்ளடக்கிய மலேசியாகினியின் செய்தி அறிக்கைக்கு எதிராக, RM220 மில்லியன் மதிப்புள்ள அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மார்ச் 24 அன்று, தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மலேசியாகினியால் வெளியிடப்பட்ட 22 கட்டுரைகளில், ஏழு பெர்னாமா கட்டுரைகள் மற்றும் 399 வாசகர் கருத்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
அந்த அம்னோ தலைவர், தற்போது 12 நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுகள், எட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் 27 பண மோசடி குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையில் உள்ளார்.
இந்த வழக்கில், மலேசியாகினி, அதன் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் ஒரு பத்திரிகையாளர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில், ஜாஹிட்டின் சட்டக் குழு, பெர்னாமா எழுதிய கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகள் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவறாகப் புகாரளித்தன அல்லது தவறாக சித்தரித்தன என்றும், அம்னோ தலைவர் மீது எதிர்மறையான பிம்பத்தைப் பதித்தன என்றும் வாதிட்டன.
இழப்பீடு தவிர, அவதூறு கட்டுரைகள் மற்றும் வாசகர் கருத்துக்களுக்கான தடை உத்தரவையும் அம்னோ தலைவர் கோரியுள்ளார்.
ஜாஹிட்டின் வழக்கறிஞர், கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியாகினிக்கு எதிராக கட்டுரை மற்றும் கட்டுரையில் உள்ள கருத்துகள் தொடர்பாக ஒரு கோரிக்கை கடிதத்தை (எல்ஓடி) வெளியிட்டார்.
மலேசியாகினியின் வழக்கறிஞர் கே.சண்முகா அதே மாதத்தில் எல்ஓடி-க்குப் பதிலளித்தார்.
“உங்கள் கோரிக்கை அறிவிப்பில், உங்கள் வாடிக்கையாளரை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் இணைப்பில் உள்ள குறிப்பிட்ட சொற்கள் அல்லது கருத்துகளைத் தெளிவாக விளக்கவில்லை, ஆனால் இதுபோன்ற அனைத்து செய்தி அறிக்கைகளுக்கும் ஒரே அர்த்தம் இருப்பதாகவும், உங்கள் வாடிக்கையாளருக்கு அவதூறு விளைவிப்பதாகக் கூறப்படுவதாகவும் ஒரு பொதுவான அறிக்கையை வெளியிட்டுள்ளீர்கள்,” என மலேசியாகினி வழக்கறிஞர் எழுதியிருந்தார்.
தெளிவு கோரி மலேசியாகினி அனுப்பியக் கடிதத்திற்கு, ஜாஹிட் தரப்பு பதிலளிக்கவில்லை.
எவ்வாறாயினும், புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவதூறாக இருப்பதாக அவர்கள் நம்பும் கட்டுரைகள் மற்றும் கருத்துகளின் பகுதிகள் வாதிகளால் கூறப்பட்டுள்ளன.