‘வாக்கு 18’ உரிமை பிரச்சாரத்தை நடத்தும் இளம் வாக்காளர்கள் சங்கம், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
18 வயதில் வாக்களித்தல் மற்றும் தானியங்கி வாக்காளர்களின் பதிவு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்ததைத் தொடர்ந்து இது திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையினால், 15-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றால், 18 முதல் 20 வயதுடைய 1.2 மில்லியன் மலேசியர்கள் வாக்களிக்க முடியாமல் போகக்கூடும் என்று இளம் வாக்காளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, 18 வயதினர் வாக்களிக்கும் உரிமையை மறுத்துவிட்டது என்று அக்குழு கூறியது.
“இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
“ஆக, வாக்களிக்கும் வயதைக் குறைப்பதைத் தாமதப்படுத்த மலேசிய அரசாங்கத்திற்கு இனியும் எந்த காரணமும் இருக்கக்கூடாது,” என்று அது கூறியுள்ளது.
இளம் வாக்காளர்கள் சங்கம் அடுத்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும்.
“(இளம் வாக்காளர் சங்கம்) அரசாங்கம் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை உறுதி செய்யும்.
“எனவே, 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டுமென இ.சி.யைக் கட்டாயப்படுத்த மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்.
“சட்ட நடவடிக்கை 2021 ஏப்ரல் 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்,” என்று சங்கம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இளம் வாக்காளர்கள் சங்கக் குழுவின் இணை நிறுவனர் கெய்ரா யூஸ்ரி, நீதித்துறை மறுஆய்வு விண்ணப்பத்தைத் தனது தரப்பு தாக்கல் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த இளம் வாக்காளர் சங்கம், தேர்தல் ஆணையம் வழங்கிய காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, நாடாளுமன்றக் கட்டிடத்தின் முன் நாளை அமைதி போராட்டம் நடைபெறவுள்ளது.