கூட்டரசுப் பிரதேசங்களின் துணை அமைச்சர் எட்மண்ட் சாந்தாரா, நியூசிலாந்தில் இருந்து திரும்பி வந்த பின்னர் வீட்டிலேயேத் தனிமைப்படுத்த அனுமதிக்கப்பட்டார்.
தற்போதைய செந்தர இயங்குதல் நடைமுறைகளின் கீழ், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை ஹோட்டல் போன்ற தனிமைப்படுத்தப்படும் மையத்தில் பிரித்து வைக்க வேண்டும்.
சந்தாராவுக்கு ஏன் விலக்கு அளிக்கப்பட்டது என்று கேட்டதற்கு, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அமைச்சின் ஆபத்து மதிப்பீட்டு நடைமுறையை குறிப்பிட்டார்.
“அமைச்சு முதலில் இடர் மதிப்பீட்டை நடத்த வேண்டும், பிறகு பரிந்துரை செய்வதற்கு முன் தனிமைப்படுத்தலின் அனைத்து காரணிகளையும் (இடங்களையும்) பரிசீலிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
சந்தாராவைப் பற்றி விளக்கிய டாக்டர் நூர் ஹிஷாம், அந்த அரசியல்வாதி ஒரு சிறிய எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த்தொற்றைக் கொண்ட பகுதியிலிருந்து திரும்பி வந்துள்ளார், மேலும் அவர் “பொருத்தமான” வீட்டைக் கொண்டுள்ளார் என்றார்.
நான் ஏன் முடியாது?
இதற்கிடையில், கோவிட் -19 தடுப்பூசி முழுமையாகப் போடப்பட்ட போதிலும், ஏன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கவில்லை என்று மலேசியரான எஸ் மணிவண்ணன் கேள்வி எழுப்பினார்.
பிப்ரவரி தொடக்கத்தில், விமானியான அவர் இரண்டாவது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற்றார்.
அவர் பிப்ரவரி 23-ல், மலேசியா திரும்புவதற்கு முன்பு ஏழு ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொண்டு, எதிர்மறை முடிவைக் கொண்டுள்ளார்.
சாந்தாராவைப் போலவே, மணியும் குறைந்த தொற்று எண்ணிக்கை கொண்ட நாட்டிலிருந்து (சிங்கப்பூர்) திரும்பினார்.
2020 டிசம்பரிலிருந்து, “பல முறை” அமைச்சுக்கு முறையிட்டதாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் மணி மலேசியாகினியிடம் கூறினார்.
“நான் அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, இல்லை, நீங்கள் வீட்டு தனிமைப்படுத்தலை செய்ய முடியாது, ஏனென்றால் ஒவ்வொரு குடிமகனும் மலேசியரல்லாதக் குடிமகனும் ஏழு முதல் 10 நாட்கள் வரை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாகும் […]
“என் கேள்வி என்னவென்றால், நீங்கள் ஏன் சந்தாராவை அனுமதித்தீர்கள், என்னை அனுமதிக்கவில்லை?” இந்த விவகாரத்தில் அமைச்சிற்கு அனுப்பப்பட்ட தனது சமீபத்திய மின்னஞ்சலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றார் அவர்.
மார்ச் 1-ல், கட்டாயத் தனிமைப்படுத்தலை முடித்து, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைக் காணச் சென்றார் மணி.
தனது தாயாரைக் கவனித்துக்கொள்வதற்காக, சொந்த ஊரான ஜொகூர், கூலாய்க்குத் திரும்பினார் மணி.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளாவிட்டால், 10 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தல் வேண்டும் என்று மலேசியா கூறுகிறது.
சிகாமாட் எம்.பி. சந்தாரா, 55 நாள்கள் விடுப்பு எடுத்து, தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுமார் 86 நாட்களை வெளிநாட்டில் கழித்த பின்னர், துணை அமைச்சர் நாடு திரும்பினார்.
எஸ்.ஓ.பி.கள் தொடர்பான விஷயங்களில், அரசாங்கம் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சிறப்பு சிகிச்சை அளிப்பதாகத் தேசியக் கூட்டணி விமர்சிக்கப்பட்டுள்ளது.