கடந்த ஆண்டு ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில், கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இருந்து ‘டாயிஸ்’ பயங்கரவாதக் குழுவில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6 பேரை அரச மலேசியக் காவல்துறை (பி.டி.ஆர்.எம்) கைது செய்தது.
கடந்தாண்டு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் உட்பட பல தேசியத் தலைவர்களைப் படுகொலை செய்யவும், பஹாங், கெந்திங்மலை சூதாட்ட மையங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மதுபான தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை நடத்தவும் அச்சுறுத்தல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
ஆயினும், தேசியக் காவற்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர், விசாரணையின் அடிப்படையில், அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது என்றும் அதற்கான எந்தத் திட்டங்களும் தயாரிப்புகளும் அவர்கள் செய்யவில்லை என்றும் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் உள்ளூர்வாசிகள், ஒருவர் இந்தோனேசியர் என்று அப்துல் ஹமீத் மேலும் கூறினார்.
புக்கிட் அமான் சிறப்புக் கிளை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு டாயிஷ் கொடிகள், ஒரு பாராங் மற்றும் கத்தி ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்ததாக அப்துல் ஹமீத் தெரிவித்தார்.
“தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருமே, 2019 அக்டோபரில் அமைக்கப்பட்ட அன்ஷோருல்லா அட் தௌஹிட், டாயிஸ் குழுவைச் சேர்ந்தவர்கள். பல புதிய உறுப்பினர்களைச் சேர்ந்த்து, மலேசியாவில் சலாபி ஜிஹாதி சித்தாந்தத்தை மேம்படுத்தி, தாக்குதல்களை நடத்தும் நோக்கம் கொண்டிருந்தனர்.
“பி.டி.ஆர்.எம். விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள், தோகுட் அரசாங்கத்தை (kerajaan Thoghut) அமல்படுத்தியதற்காக டாக்டர் மகாதீர் மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல்களை விடுத்தது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
அந்த அறுவரும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130JB (1) (a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள், இது ஒரு பயங்கரவாதக் குழு தொடர்பான பொருட்களை வைத்திருத்தல், காவலில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் சட்டம் ஆகும்.