கட்சியின் மீது மகளிர் கொண்டுள்ள விசுவாசத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அடுத்த பொதுத் தேர்தலில் (ஜி.இ), 30 விழுக்காடு பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று அம்னோ மகளிர் தலைவர் நோராய்னி அகமது விரும்பம் தெரிவித்தார்.
உயர்க்கல்வி அமைச்சருமான நோராய்னி, அம்னோவைச் சேர்ந்த ஆண் எம்.பி.க்கள் பெண் எம்.பி.க்களை விட அதிகமாகக் கட்சி தாவுகின்றனர் என்றார்.
“இந்தப் பெண்கள் விசுவாசமுள்ளவர்கள், கட்சி மாறுவது அவர்களுக்குக் கடினம். கட்சி மாறுகிறவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். நான் கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன், இந்த பெண்களையும் கொஞ்சம் பாருங்கள்,” என்று அவர் கூறினார்.
பெண்களை மேம்படுத்துவதற்கான சரியான பாதையில் நாடு இருந்தாலும், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பெர்சத்து கட்சிக்குத் தாவிய 17 அம்னோ எம்.பி.க்களில், இருவர் மட்டுமே பெண்கள்.
மலேசியாவில், தற்போது 33 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இது மொத்த 222 நாடாளுமன்ற இடங்களில் 14.86 விழுக்காடாகும்.
இதற்கிடையில், முஹைடின் யாசினின் அமைச்சரவையில், நோராய்னி ஓர் உறுப்பினராக இருந்தபோதிலும், அக்கூட்டணி அரசாங்கத்துடன் அவர் ஒத்துப்போகவில்லை என்று கருதப்படுகிறது. அவர் தேசியக் கூட்டணியை ஒரு ‘தற்காலிக அரசாங்கம்’ என்று குறிப்பிட்டார்.
“நாம் இப்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம், ஆனால் இந்த இடைக்கால அரசாங்கம் தன்னிச்சையாக செயல்பட பச்சை விளக்கு காட்டுகிறோம் என்று இதற்கு அர்த்தமல்ல,
“நான் ஒரே மேடையில் இருந்தாலும், எல்லா செயல்களும் – மக்களின் நம்பிக்கையைக் கெடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், நான் கட்டாயம் இணங்குவேன் என்று அர்த்தமில்லை.
இதற்கிடையில், பி.கே.ஆர். மற்றும் டி.ஏ.பி-உடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் மற்றும் அடுத்தப் பொதுத் தேர்தலில் பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வோம் என்ற கட்சியின் முடிவுகளை, அம்னோ மகளிர் ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
“அம்னோவும் பெர்சத்துவும் ஒரே தலையணையில் தூங்குவது கடினம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஏனென்றால் எங்களுக்கு வெவ்வேறு அபிலாஷைகள் உள்ளன. அம்னோவும் பெர்சத்துவும் நலன்களின் அடிப்படையில் முரண்படுகின்றன,” என்று நோராய்னி கூறினார்.