அரச மலேசியக் காவற்படையில் “கார்டெல்கள்” (கூட்டமைப்பு) இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் பதில் “பலவீனமாகவும் திருப்தியற்றும்” உள்ளது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ விவரித்தார்.
“நவீன சவால்களை எதிர்கொள்ள, சட்டங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது காவற்துறையினருக்கு அவசியம் என்பதைப் பிரதமருடன் நானும் ஒப்புக்கொள்கிறேன்.
“ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதற்கும், ஐ.ஜி.பி. (போலிஸ் தலைவர் அப்துல் ஹமீத் படோர்) அவர்களால் செய்யப்பட்ட புகார்களை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா?
“பி.டி.ஆர்.எம். மீதான பொதுமக்களின் ஒருமைப்பாட்டையும் நம்பிக்கையையும் மீட்டெடுப்பதற்காக, போலிஸ் படையிலேயே தனிதனி கூட்டமைப்புகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ஐ.ஜி.பியின் அழைப்பை ஆதரிக்கும் பிரதமரின் உறுதியான அறிக்கை எங்கே?” என்று கோபிந்த் இன்று ஒரு செய்திக்குறிப்பில் கூறினார்.
கடந்த வாரம், சினார் ஹரியான் நடத்திய ஒரு நேர்காணலில், அப்துல் ஹமீத் போலிஸ் படையில் ஒரு “குழு” இருப்பதாகவும், இளம் அதிகாரிகள் அடங்கிய அக்குழு அவரை வீழ்த்த முயல்வதாகவும் கூறினார்.
அவர் விவரங்களைத் தரவில்லை, ஆனால் நேர்காணல் “கார்டெல்” தனிப்பட்ட லாபத்திற்காக அப்துல் ஹமீத்தை வீழ்த்த விரும்புவதாக எடுத்துக்காட்டுகிறது.
சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசான் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் ஆகியோர் இந்தப் பிரச்சினையைக் காவல்துறையினர் அவர்களுக்குள்ளேயே கையாள்வார்கள் என்று கருதினர்.
பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அப்துல் ஹமீத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ.) அமைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் “கட்டுப்பாட்டில் உள்ளது” என்றும், ஆர்.சி.ஐ. தேவையில்லை என்றும் அப்துல் ஹமீத் கூறினார்.
இருப்பினும், சிக்கலைச் சமாளிக்க பி.என். அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோபிந்த் கூறினார்.
“இதுவரை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பி.என். அரசாங்கம் அளித்த பதில்கள் பலவீனமாகவும் திருப்தியற்றதாகவும் உள்ளன.
“பிரதமர் இதுகுறித்து பேச வேண்டும், ஓர் அறிக்கை உருவாக்கப்பட்டு, முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓர் உறுதி அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.