‘வாக்கு18’ ஆதரவாளர்கள் உரிமை கோரி நாடாளுமன்றத்தின் முன் கூடினர்

நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தலைவரை, வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமையை இளைஞர்களுக்கும் வழங்கக் கோரி, சுமார் 100 ‘வாக்கு18’ ஆதரவாளர்கள் இன்று நாடாளுமன்றத்தின் முன் அமைதியாக கூடியிருந்தனர்.

விரைவில், அடுத்தப் பொதுத் தேர்தல் நடைபெறும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த எதிர்ப்பு வந்துள்ளது.

மூடா கட்சியின் தலைமைச் செயலாளர் அமீர் அப்துல் ஹாடி, பாடாங் மெர்போக்கிலிருந்து ஊர்வலத்தை வழிவழிநடத்தி, பின்னர் நாடாளுமன்ற நுழைவாயிலிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் குந்தியிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அவர்கள் 18 நிமிடங்கள் தியானித்திருந்து, தங்களின் ஆர்பாட்டத்தை அடையாளப்படுத்தினர்.

பார்வையாளர்களிடம் பேசிய அமீர், புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் (இசி) அலுவலகத்திற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திற்கு வரத் தேர்வுசெய்ததாகக் கூறினார். ஏனெனில், 2019 ஜூலை மாதம் வாக்களிக்கும் வயதைக் குறைப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

வாக்கு18 செயலகத்தின் பிரதிநிதி நூருல் ரிஃபயா முஹம்மது இக்பால் அக்குழுவின் கோரிக்கைகளைப் படித்தார். அதைத் தொடர்ந்து, பி.எச். இளைஞர்கள் மற்றும் மஹாசிஸ்வா ஹராப்பான் உள்ளிட்ட ஆதரவு குழுக்களிடமிருந்து அதேபோன்ற அழைப்புகள் வந்தன.

“15 மாதங்களுக்கும் மேலாக ஒத்திவைப்பது நியாயமற்றது மற்றும் 18 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான அதிகாரிகளின் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை.

“மலேசியர்களும், குறிப்பாக இளைஞர்களும் இந்த முடிவைக் கடுமையாக எதிர்க்கின்றனர், ஏனெனில் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளில், தேர்தல்களில் வாக்களிப்பது அனைத்து பெரியவர்களுக்கும் மனித உரிமை ஆகும்,” என்று அவர் கூறினார்.

“வாக்கு18-ஐ செயல்படுத்துவதில், தேர்தல் ஆணையத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது?

“நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவ விரும்பும் இளைஞர்களாகிய எங்கள் குரல் எங்கே?” என்று என்ஜிஓ புரோஜெக் 57-இன் ஆர்வலரும் ஒற்றுமை தூதருமான நூருல் ரிஃபயா கேட்டார்.

வாக்களிக்கும் வயதைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், 18 வயதை எட்டியவர்களுக்கு தானியங்கி வாக்காளர் பதிவு முறையை அமல்படுத்தவும் குழு கோரியது.

“இது ஓர் ஒற்றுமை இயக்கம், இது அரசியல், இனம், மதம், வயது தடைகளை […] 18 வயது முதல் 30, 40, 50 மற்றும் 60 வயதிற்குட்பட்டவர்களையும் மீறியது,” என்று பி.எச். இளைஞர் பிரிவு தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் தெரிவித்தார்.

“இன்றைய எங்கள் கோரிக்கைகள் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்ட, தீவிரக் கோரிக்கைகள் என்பதற்கான அறிகுறி இதுவாகும்” என்று அமானா இளைஞர் பிரிவு தலைவர் கூறினார்.

“இது (வாக்களிக்கும் உரிமை) ஒரு சலுகை அல்ல, அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டிய உரிமை,” என்று ஷஸ்னி கூறினார்.

வாக்கு18 குழுவின் பிரதிநிதி தர்மா பிள்ளை, தேர்தல் ஆணையமும் அரசாங்கமும் இந்த ஒத்திவைப்புக்கு ஒருவருக்கொருவர் விரல் காட்டி விளையாடுவதாகத் தெரிகிறது.

வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கு ஏற்படவுள்ள இழப்பு பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை என்றார்.

“எங்கள் வாக்குகள் எங்கே?… நாங்கள் உங்களுடன் விளையாட வரவில்லை,” என்று அவர் கூறினார்.

15-வது பொதுத் தேர்தல், ஆகஸ்ட் மாதம் அவசரகாலப் பிரகடனம் முடிவடைந்தது நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து ஏராளமான எதிர்ப்பாளர்கள், இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தட்டிகளை ஏந்திச் சென்றனர், அதில் ‘18 வயது சிறுவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு, ஆனால் வாக்களிக்க அனுமதி இல்லை’ போன்ற வாசகங்களும் இருந்தனர்.

இந்தக் குழுவினருக்கு தங்கள் ஆதரவைக் காட்ட, பெட்டாலிங் ஜெயா எம்.பி. மரியா சின் அப்துல்லா, பி.கே.ஆர். தியான் சுவா, டிஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் ஹோவர்ட் லீ, டிஏபி கெத்தாரி சட்டமன்ற உறுப்பினர் யாங் ஷெபுரா ஓத்மான், முன்னாள் கல்வி அமைச்சரும் சிம்பாங் ரெங்கம் எம்.பி.யுமான மஸ்லீ மாலிக், பெஜூவாங் தகவல் பிரிவுத் தலைவர் உல்யா அகமா மற்றும் பிஎஸ்எம் மூத்தத் தலைவர் எஸ்.அருல்செல்வன் போன்ற அரசியல்வாதிகளும் வந்திருந்தனர்.

பிற்பகல் 2.30 மணியளவில், ஒரு சிறிய எண்ணிக்கையிலான போலிஸ் படையினர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

அமானா தன்னார்வலர்கள் பங்கேற்பாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் உதவினர்.

ஒரு மணி நேரப் பேரணிக்குப் பின்னர், எதிர்ப்பாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.