வாக்கு18 : பி.என். பயப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டதுடன் எந்தத் தொடர்பும் இல்லை – முஹைதீன்

தேசியக் கூட்டணி அரசு (பி.என்.) 18 வயதினர் வாக்களிப்பு (வாக்கு 18) மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு கண்டு பயப்படவிலை, அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையம் (இ.சி) இந்த செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று பி.என். விரும்புகிறது.

இருப்பினும், பிரதமர் முஹைதீன் யாசின், தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சல்லேவிடம் சமீபத்தில் இந்தச் செயல்முறையை ஒத்திவைப்பது குறித்து விளக்கம் பெற்றதாகக் கூறினார்.

இந்தச் செயல்முறையை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதில் பி.என்-க்குத் தொடர்பு இருப்பதாக கூறும் சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை விமர்சித்த முஹைதீன், அதன் செயல்பாட்டின் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னர், அந்த சுயாதீன அமைப்பால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

“இது பி.என். அரசாங்கத்தைப் பற்றியது அல்ல. நாம் ஆதரிக்கும் ஆணையங்களைப் பற்றியது. அவர்களின் பணிகளை முடிக்க, அவர்களின் (இ.சி) முயற்சிகள் எதுவாக இருந்தாலும், நாம் உதவுகிறோம். ஆனால் தொற்று சூழ்நிலைகளிள் மற்றும் பலவற்றால் அவ்வாறு (தானியங்கி பதிவு மற்றும் வாக்கு 18) செய்ய முடியாமல் போனது.

“எனவே, தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், இந்த விவகாரம் (செயல்படுத்தல்) குறித்து நாம் விவாதிக்க முடியாது, எனவே முடிந்தால் விரைவுபடுத்துங்கள்,” என்று பாகோ எம்.பி.யுமான அவர், நேற்று ஜொகூர், மூவாரில் உள்ள பாகோ சிறப்பு பொருளாதார மண்டலத்தின் முதல் கட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். .

தேர்தல் ஆணையம் வழங்கிய 1 செப்டம்பர் 2022 தேதிக்கு முன்னதாக இந்தச் செயலாக்கத்தை விரைவுபடுத்த முடியுமா என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாகவும் முஹைடின் சொன்னார்.

“(இசி சொன்னது) செப்டம்பரில் (2022) இது சாத்தியமானால், அதுவே மிக விரைவானது. இந்த ஆண்டு செப்டம்பரில் இது சாத்தியமா என்று நான் கேட்டதற்கு, சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

“எனவே, நாம் அனைவரும் இதைப் பற்றி உணர்ச்சிவசப்படுகிறோம்… இது பிஎன் அரசாங்கம் இளைஞர்களைப் பார்த்து பயப்படுவதைப் பற்றியது அல்ல… பதிவு செய்த பின்னர், அவர்கள் தேசியக் கூட்டணையை ஆதரிக்க மாட்டார்கள். இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் அரசாங்கத்தை ஆதரிப்பதாக நான் நம்புகிறேன் … எனவே விரைந்து செயல்படுத்துவது நல்லது.

“ஆனால், அதை நாம் எப்படி செய்வது என்ற ஒரு கேள்வி எழும்… எனவே நாம் அதைப் பற்றி யதார்த்தமாக இருக்க வேண்டும், நாம் இதில் அரசியல் செய்யத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் தனது பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதைப் பார்ப்போம்,” என்று கம்பீர் சட்டமன்ற உறுப்பினரான முஹைதீன் கூறினார்.

இந்த முடிவை தேர்தல் ஆணையமே தீர்மானித்தது என்பதை வலியுறுத்தும் அதே வேளையில், பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதால், தேசியப் பதிவுத் துறை (ஜேபிஎன்) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் உள்ளடக்கியுள்ளதால், விரைவில் அவர்களால் அதைச் செயல்படுத்த முடியாது என்று அந்த சுயாதீன அமைப்பு விளக்கியது என்றார்.

-பெர்னாமா