18 வயதில் வாக்களிப்பு (வாக்கு18) மற்றும் தானியங்கி ஓட்டுப் பதிவு ஆகியவற்றை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் (இசி) எடுத்த முடிவு நியாயமானது என்று மஇகா தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
உண்மையில், நாம் சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன (வாக்கு 18 அமல்படுத்தப்படுவதற்கு முன்பு), நாம் இளைஞர்களின் ஆதரவை மட்டும் பெற விரும்பவில்லை, அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்க விரும்பினால் அது ஒரு நல்ல விஷயம், ஆனால் அதனை முழுமையாகச் செயல்படுத்தப்படும்போது அதன் நன்மை தீமைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.
“கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், நிச்சயமற்ற நிலையில் இருக்கும் கல்வி பிரச்சினையை எதிர்த்துப் போராடுவது நமக்கு நல்லது,” என்று, நேற்று சுங்கை சிப்புட்டில், மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) ஏற்பாடு செய்த, ‘1ஃபோர்ஸ் கிரைம்’ திட்டத்தை (Program ‘1 Force Crime’) அதிகாரப்பூவமாகத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், எதிர்காலத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்க வேண்டும், எனவே அதனை அவசரமாகச் செயல்படுத்தப்படக்கூடாது என்றார் விக்னேஸ்வரன்.
முன்னதாக, தானியக்க வாக்காளர் பதிவு மற்றும் 18 வயதில் வாக்களிக்கும் தகுதி, அடுத்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகே செயல்படுத்தப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சல்லே கூறியிருந்தார்.
கோவிட் -19 தொற்று, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்களைத் தானியங்கி முறையில் பதிவு செய்வதற்கான தயாரிப்புகளையும் 18 வயதினர் வாக்களிக்கும் திட்டத்தையும் பாதித்தது, இது எதிர்வரும் ஜூலை மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
- பெர்னாமா