அம்னோவிலிருந்து துன் ஃபைசல் 6 ஆண்டுகள் இடைநீக்கம்

சிறப்பு விவகாரங்கள் (சேவைகள்) துறையின் (ஜாசா) முன்னாள் இயக்குநர் துன் ஃபைசல் இஸ்மாயில் அஜீஸ் அம்னோவிலிருந்து ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மார்ச் 8-ம் தேதி, கட்சியின் ஒழுக்காற்று வாரியம் எடுத்த முடிவை அம்னோ உச்சமன்றச் செயற்குழு உறுதி செய்ததை அடுத்து, இடைநீக்கக் கடிதம் நேற்று வெளியிடப்பட்டது.

கட்சியின் தலைமைச் செயலாளர் அஹ்மத் மஸ்லான் கையெழுத்திட்ட அந்தக் கடிதத்தில், அம்னோ உறுப்பினராக நெறிமுறைகளை மீறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியை விமர்சித்தார் என்று நம்பப்படுவதாக, புத்ராஜெயா அம்னோ தலைவர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஃபைசலுக்கு எதிராக ஓர் ஒழுக்காற்று புகாரை செய்ததாக உத்துசான் மலேசியா செய்தி கூறியது.

பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் ஜாஹித் மற்றும் பிறக் கட்சித் தலைவர்களின் நடவடிக்கையை ஃபைசல் முன்பு விமர்சித்திருந்தார்.

பி.கே.ஆருடன் இணைந்து பணிபுரிய, அம்னோ தயார் ஆவதற்கான முயற்சிகள் நடக்கிறது என்று ஊகிக்கப்பட்டதையும் ஃபைசல் விமர்சித்தார்.

இருப்பினும், 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பி.கே.ஆருடன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது என்று ஜாஹித் கூறினார்.