நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே, வாக்கு18-க்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று, போராட்டக்காரர்களைக் கண்காணித்த டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் மொஹமட் ஜைனல் அப்துல்லா, அடையாளம் காணப்பட்ட அனைவரும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்படுவார்கள் என்றார்.
“முன்னறிவிப்பின்றி ஓர் ஆர்பாட்ட ஒன்றுகூடலை நடத்தியதற்காக, அமைதியான ஒன்றுகூடல் சட்டம் 2012, பிரிவு 9 (5)-இன் கீழ் விசாரணைகள் நடத்தப்படும்.
“(மற்றும்) ஒழுங்குமுறை 11, தொற்று நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் (உள்ளூர் தொற்றுநோய்களின் நடவடிக்கைகள்) (நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு ஆணை) (எண் 4) விதிமுறைகள் 2021,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சம்பந்தப்பட்ட அனைவரும், சாட்சியமளிக்க விரைவில் டாங் வாங்கி மாவட்டக் காவல் தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்கள்.
“விசாரணைகள் முடிந்ததும், விசாரணை அறிக்கை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும்,” என்று முகமது ஜைனல் கூறினார்.
முன்னதாக, நேற்று ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்த போலீசார் அறிவுறுத்தல்கள் எதனையும் வழங்கவில்லை.
வருகையாளர்களில் பெரும்பகுதியினர் கட்டுப்பாட்டுடன் இருந்தனர், குறிப்பாக சமூக இடைவெளியை அமானா தன்னார்வக் குழுவினர் கவனித்து கொண்டனர்.
இந்த ஜூலை மாதத்தில், வாக்களிக்கும் வயதை 18-ஆக குறைப்பது மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்து குறித்து அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஒன்றுகூடினர்.