அன்னுவார் : அமைச்சர்களை ஜாஹித் இராஜினாமா செய்ய சொல்வது பொறுத்தமல்ல

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அம்னோவில் உள்ள எம்.பி.க்களை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய சவால் விடக்கூடாது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.

ஜாஹித் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அன்னுவார் தனது முகநூலில் வெளியிட்ட பேட்டியில், அந்தச் செய்தி தனக்கானது என்று தெளிவாகத் தெரிவதாகக் கூறினார்.

“நான் நேர்மையானவன், ஒரு தலைவர் யாருக்கும் சவால் விடுவது பொருத்தமானதல்ல என்று நான் சொல்கிறேன்.

“கட்சியில் சவால் கலாச்சாரத்தை நாம் ஊக்குவித்தால், மற்றவர்கள் தலைவருக்குச் சவால் விடுத்தால் என்ன செய்வது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அம்னோ தலைவர் பதவியை இராஜினாமா செய்ய ஜாஹித்துக்குச் சவால் விடுத்ததை தான் முன்னர் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

“நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட (பிஎன் பொதுச் செயலாளர்) ஒரு வாரத்தில், பதவியை இராஜினாமா செய்ய தலைவருக்கு அழுத்தம் கொடுப்பதை ஒப்புக் கொள்ளவில்லை.

“தலைமைத்துவத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அரசியலமைப்பு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மூன்று வருடங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று தலைமை நிறுவனம் கூறுகிறது.

“ஆக, பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தலைவரை இராஜினாமா செய்ய கோரினால், நாம் தலைமை நிறுவனத்தை மதிக்கவில்லை என்று அர்த்தம்,” என்று அன்னுவார் கூறினார்.

“அடுத்தப் பொதுத் தேர்தல் வரை, நாம் அரசாங்கத்தில் இருப்போம் என்று கூறியுள்ளோம், எனவே அமைச்சர்களும் அங்கேயே இருப்பார்கள். அமைச்சர்களை இராஜினாமா செய்யுமாறும் நீங்கள் ஏன் சவால்விடுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

இதற்கிடையில், அன்னுவார், அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசானின் உரையைப் பாராட்டினார்.

பெர்சத்து – அம்னோ ஒத்துழைப்பில் தனது நிலைப்பாட்டைக் காத்துக்கொண்ட அன்னுவார், மலாய் சார்ந்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.

இருப்பினும், அம்னோ பொது மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக்கொள்வதாக அவர் கூறினார்.