பதவி விலகுவதில் தாஜுட்டின், இஸ்மாயில் சப்ரிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை

அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுட்டின் அப்துல் இரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனப் (ஜி.எல்.சி.) பதவியிலிருந்து விலகுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கியப் பதவியைவிட மிகப் பெரியது என்பதால் பதவியைத் துறக்கத் தயங்கவில்லை என்று மலேசியா பிரசரணா பெர்ஹாட்டின் தலைவரான அவர் கூறினார்.

“அம்னோவின் போராட்டம், கட்சியின் போராட்டம் பெரியது. போராட்டத்தை வர்த்தகம் செய்ய முடியாது,” என்று அவர் புத்ரா உலக வாணிப மையத்தில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

முன்னதாக, முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை நேற்று அம்னோ மாநாட்டு தீர்மானித்துள்ளது.

இது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அந்த நடவடிக்கையால் பி.என். அரசாங்கம் வீழ்ச்சியடையும், நாடாளுமன்றத்தைக் கலைக்க மாமன்னருக்கு அறிவுறுத்துவதைத் தவிர முஹைதீனுக்குக் கிட்டத்தட்ட வேறு வழியில்லை.

அம்னோ தனது ஆதரவை மீட்டுக்கொள்ளும்போது, ​​அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அல்லது ஜி.எல்.சி. தலைவர்கள் அனைவரும் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அஹ்மத் ஜாஹித் கூறியிருந்தார்.

தாஜுட்டினின் கூற்றுப்படி, எந்தவொரு அம்னோ எம்.பி.யும் பிடிவாதமாக இல்லை, கட்சி விரும்பியப்படி இராஜினாமா செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

“கட்சியை எதிர்க்கும் உறுப்பினர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும். அதுவே கட்சி ஒழுக்கம்,” அவர் கூறினார்.

இதற்கிடையில், அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும், அம்னோ உதவித் தலைவரான இஸ்மாயில் சப்ரி யாகோப், கட்சியின் ஒவ்வொரு முடிவிற்கும் தான் கட்டுப்படுவேன் என்று கூறினார்.

“கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் என்ற வகையில், உச்சமன்றம் (எம்டி) மற்றும் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைவரும் கட்டுபட வேண்டும்.

“நிச்சயமாக நாங்கள் அந்த முடிவுக்குக் கட்டுப்படுவோம்,” என்று அவர் மீண்டும் விளக்கினார்.