ஒதுக்கீடு மறுக்கப்பட்டது, 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பினாங்கு அரசாங்க அமர்வை புறக்கணித்தனர்

இன்றும் நாளையும் நடைபெறும் பினாங்கு மாநிலச் செயற்குழு (எம்.எம்.கே.) உறுப்பினர்கள் அமர்வை, நான்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

டாக்டர் அஃபிஃப் பஹார்டின் (செபெராங் ஜெயா), சுல்கிஃப்லி இப்ராஹிம் (சுங்கை ஆச்சே), கலிக் மெஹ்தாப் மொஹமட் இஷாக் (பெர்தாம்) மற்றும் சோல்கிஃப்லி முஹமட் லாசிம் (தெலுக் பஹாங்) ஆகிய அந்நால்வரும் பெர்சத்து கட்சியைச் சார்ந்தவர்கள்.

இன்று ஒரு கூட்டு அறிக்கையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டை இரத்து செய்ய மாநில அரசு எடுத்துள்ள முடிவே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 19 தேதியிட்ட கடிதத்தின் மூலம் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஜனவரி 20-ம் தேதி ஒப்புதல் அளித்த RM60,000 ஒதுக்கீட்டைப் பினாங்கு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

“பெரும்பான்மையான மக்கள் இன்னும் சுகாதாரம் மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில், மக்களைத் தண்டிப்பதையும் அரசியல் விளையாட்டையும் நிறுத்த வேண்டும் என்று பினாங்கு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

தங்கள் மாநிலத் தொகுதிகளில், உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்த இந்த ஒதுக்கீடு மிகவும் முக்கியமானது என்று அவர்கள் கூறினர், ஆனால் மாநில அரசு அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது, இது நிபுணத்துவம் அற்ற செயல் என அவர்கள் மேலும் சொன்னார்கள்.

“நாங்கள், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், எங்கள் சேவையைத் தொடர்வோம், மேலும் மக்கள் மீது அக்கறை கொண்ட, அனைத்து திட்டங்களையும் அனைத்து மக்களுக்காகவும் முன்னெடுக்கும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திடமிருந்து ஒதுக்கீடுகளைப் பெற முயற்சிப்போம்,” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முதலில் பி.கே.ஆர் உறுப்பினர்களாக இருந்த அஃபிஃப்பும் சுல்கிஃப்லியும், தேசியக் கூட்டணியை ஆதரித்ததால், 2020 ஜூன் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அஃபிஃப் இப்போது பெர்சத்து உறுப்பினராக இருக்கிறார், சுல்கிஃப்லி தேசியக் கூட்டணியை ஆதரிக்கும் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

‘அனைத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அல்ல’

இதற்கு உடனடி பதில் அளித்த, பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமி, அனைத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஒதுக்கீடுகள் மறுக்கப்படவில்லை என்றார்.

அம்னோ மற்றும் பாஸ் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அதாவது யூசோஃப் நூர் (சுங்கை டூவா), நோர் ஹஃபீசா ஓத்மான் (பெர்மாத்தாங் பெராங்கான்) மற்றும் யுஸ்னி மாட் பியா (பெனாகா) ஆகியோர் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.

இன்றைய மாநில அரசு அமர்விலும் அவர்கள் கலந்துகொண்டனர்.

“இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் குதித்து மக்களின் ஆணையை காட்டிக் கொடுத்தனர், எனவே, புகார் செய்வது பொருத்தமானதல்ல.

“இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சி தாவல் மூலம் மக்களின் ஆணைக்குத் துரோகம் செய்தனர், எனவே, புகார் செய்வது பொருத்தமானதல்ல.

“இது மலிவான விளம்பரம் மட்டுமே. அவர்கள் மாநில அரசின் அமர்வுக்கு வந்து இந்த விஷயத்தை எழுப்ப வேண்டும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கட்சி தாவிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற, பினாங்கு பி.எச். மன்றம் முடிவு செய்ததாக இராமசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 27-ம் தேதி, முதல்வர் சோவ் கோன் இயோ அறிவித்த “தத்தெடுப்பு சட்டமன்ற உறுப்பினர்” திட்டத்தின் மூலம் அப்பகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

“பாலிக் பூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் – தெலுக் பாஹாங் சட்டமன்ற தொகுதிக்கும், துணை முதலமைச்சர் I – பெர்தாம் தொகுதிக்கும், பெர்மாத்தாங் பாவ் எம்.பி. – செப்ராங் ஜெயா தொகுதிக்கும், புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் – சுங்கை ஆச்சே தொகுதிக்கும் ‘தத்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக’ நியமிக்கப்பட்டுள்ளதாக,” சோவ் கூறினார்.