லிம் : வாக்கு18-ஐ ஹாடி நிராகரிப்பதன் காரணம் என்ன?

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கான தனது ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து விளக்கமளிக்க, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்குச் சவால் விடப்பட்டது.

துல்லியமான விளக்கம் இல்லையென்றால், 2019-ல் நாடாளுமன்றத்தில் திருத்தத்திற்கு ஆதரவாக ஹாடி வாக்களித்தது நேர்மையற்றது என்பதை நிரூபிக்கிறது என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“(இதன் பொருள்) இது உண்மையில் நேர்மையான ஆதரவு அல்ல,” என்று லிம் கூறினார்.

வாக்களிக்கும் வயதைக் குறைக்கும் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் மசோதாவிற்கு, 2019 ஜூலை 16-ல் மக்களவையில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதா, இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர வேண்டும். இருப்பினும், தேசியக் கூட்டணி-தேசிய முன்னணி-ஜி.பி.எஸ். கூட்டணி இந்தச் செயல்முறையை 2022 செப்டம்பர் 1 வரை ஒத்திவைத்தது.

ஒத்திவைப்புக்கு தனது கட்சி ஆதரவளிப்பதாக ஹாடி கூறினார்.

இருப்பினும், அடுத்தப் பொதுத் தேர்தலின் போது, 18 முதல் 20 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், 18 வயதில் வாக்களிப்பது உலகில் வழக்கமாகி வருகிறது என்ற உண்மையைப் புறக்கணித்த ஹாடியின் அறியாமையை லிம் விமர்சித்து பேசினார், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் (ஓ.ஐ.சி.) உறுப்பு நாடுகளிடையே.

சவூதி அரேபியா, ஈரான், ஈராக், துருக்கி, ஜோர்டான், அல்ஜீரியா, லிபியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளை லிம் மேற்கோள் காட்டினார்.

பிரேசில், ஈக்குவடார், கியூபா, நிகரகுவா, ஸ்காட்லாந்து மற்றும் அர்ஜெண்டினா போன்ற பிற நாடுகளில், வாக்களிக்கும் வயது 16-ஆக உள்ளது.