ம.இ.கா. தலைவர் : கேப்டன் இல்லாமல் போர் செய்ய முடியாது, எங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?

அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி (பி.என்.) தனியாகப் போராட விரும்பினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று பிரதமர் வேட்பாளராக இருக்கப்போவது யார் என்பதுதான் என்று ம.இ.கா. தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“நீங்கள் போராடப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு கேப்டன் தேவை.

“பி.என்.னுக்கான சுவரொட்டியை யாருடைய முகம் அலங்கரிக்கும்? இது தீர்க்கப்பட வேண்டும். கேப்டன் இல்லாமல், ஒரு கொடியுடன் தேர்தலில் போட்டியிட முடியாது,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

ஏப்ரல் 3-ம் தேதி, மஇகாவின் ஆண்டு பொதுக் கூட்டத்தில், பிரதிநிதிகள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று என்று விக்னேஸ்வரன் கூறினார்.

“கட்சி பிரதிநிதிகள் எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள், பி.என்.-உடன் (நாங்கள் இருக்க விரும்பினால்), அடுத்தப் பிரதமராக யார் இருப்பார்கள்? இந்த ஒரு கேள்விக்குப் பதிலளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இப்போது தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் தேசிய முன்னணி, அடுத்தப் பொதுத் தேர்தலில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தனித்து நின்று முயற்சிக்கும் என தற்போது அதற்குத் தலைமை ஏற்றிருக்கும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியது தொட்டு விக்னேஸ்வரன் கருத்துரைத்தார்.

மஇகா தலைவரின் கூற்றுப்படி, அவரது கட்சி அடுத்தப் பொதுத் தேர்தலில் பி.என். சின்னத்தின் கீழ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தெளிவான வழிநடத்துதலின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“இன்று வரை, நாங்கள் பி.என். சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் … ம.இ.கா.வைப் பொறுத்தவரை, நாங்கள் பி.என்.-உடன் இருக்கிறோம். ஆனால், நாங்கள் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வோம் என்பது குறித்து பி.என். ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அம்னோவுக்குச் சிறந்ததாகக் கருதப்பட்டதன் அடிப்படையில், பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்திருப்பதைக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன், மற்ற பி.என். உறுப்புக் கட்சிகளும் சுயமாக ஒரு முடிவை எடுக்கும் என்றார்.

“பெர்சத்துவுடன் ஒத்துழைக்கலாமா, வேண்டாமா, என்பதை ம.இ.கா. தீர்மானிக்கும், இது எங்கள் சொந்த முடிவு.

“… எனவே, எல்லோரும் இப்போது அந்தந்தக் கட்சிகளுக்காக சிறந்த முடிவை எடுப்பார்கள். ம.இ.கா.வும் முடிவெடுக்க வேண்டும், ம.இ.கா. முடிவெடுக்கும்,” என்று அவர் கூறினார்.