ஜொகூர் பெர்சத்து துணைத் தலைவர் முஹமட் நசீர் ஹஷிம், அம்னோ மந்திரி பெசார் ஹஸ்னி முகமது தலைமையிலான ஜொகூர் மாநில அரசு எந்த நேரத்திலும் சரிந்து விடக்கூடும் என்பதை நினைவுபடுத்தினார்.
மாநில அரசை அமைக்க துணையாக இருந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள், ஜொகூர் அம்னோவின் நிலைப்பாட்டில் ஏமாற்றமடைந்தால், அது நடக்கக்கூடும் என அவர் கூறினார்.
“அண்மையில் அம்னோ பொது மாநாட்டில், ஜொகூர் மந்திரி பெசார் உரை ஜொகூர் பெர்சத்துவிற்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜொகூர் அரசாங்கத்தின் ஒருமித்த கருத்தில் பெர்சத்து நிலைப்பாட்டையும் பங்களிப்பையும் அம்னோ தெளிவாகக் குறைத்து மதிப்பிடுகிறது.
“இப்போது வரை, பெர்சத்து என்பது ஜொகூர் அரசாங்கத்திற்கு உதவும் ஒரு கட்சியாகும், மாநில அரசு சிறப்பாகச் செயல்பட அது உதவுகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அம்னோ மாநாட்டில், ஜொகூர் அம்னோ தலைவரான ஹஸ்னி, பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசினைப் பிரதமர் என்ற முறையில் அவமதித்ததோடு மட்டுமல்லாமல், கட்சியையும் வெளிப்படையாக இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ), ஜொகூர் அம்னோ அதன் கோட்டையான பாகோ நாடாளுமன்ற இருக்கையில் முஹைதீனை எதிர்த்து நிற்க தயாராக உள்ளது. எனவே, ஜிஇ-யை எதிர்கொள்ளும் திட்டங்களை உருவாக்க, ஜொகூர் அம்னோவுக்குச் சுயாட்சி வழங்குமாறு கட்சித் தலைமையை ஹஸ்னி கேட்டுக் கொண்டார்.
மேலும் கருத்து தெரிவித்த நசீர், ஜொகூர் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதில், ஹஸ்னி மிகவும் முதிர்ச்சியுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றார்.
“ஹஸ்னிக்கு நினைவூட்ட விரும்புகிறேன், ஜொகூர் அரசாங்கத்தை உருவாக்கிய கட்சியைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது அறிக்கை மற்றும் நிலைப்பாட்டால் ஏமாற்றமடைந்தால், தற்போதைய அரசாங்கம் எந்த நேரத்திலும் சரிந்துவிடும்.
தேசியக் கூட்டணி (பி.என்.) ஜொகூரில் 29 சட்டமன்ற இடங்களை மட்டுமே கொண்டுள்ளது (பக்காத்தான் ஹராப்பான் 27 இடங்கள்). ஒரு பி.என். சட்டமன்ற உறுப்பினரின் விலகலும் ஜொகூர் மாநிலச் சட்டசபை இடைநிறுத்தப்படுவதற்குப் போதுமானது என்று கூறப்படுகிறது.
கம்பீர் சட்டமன்ற உறுப்பினருமான பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் தனது கட்சியைப் பி.எச். கூட்டணியிலிருந்து விலக்கியதைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி 28-ல், ஹஸ்னி ஜொகூரின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார்.
அவர், ஏப்ரல் 14, 2019 அன்று, 17-வது மந்திரி பெசாராகப் பதவி வகித்த பெர்சத்துவின் டாக்டர் சஹ்ருட்டின் ஜமாலுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.
ஜொகூர் மந்திரி பெசார் நியமனம், 2018 மே 9, 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக நடந்துள்ளது.