பி.என்.எம். : எதிர்பாராத சவால்களைச் சமாளிக்கப் பணத்தை விவேகத்துடன் நிர்வகிக்கவும்

நல்ல நிதி மேலாண்மை என்பது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பெரிய சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள, குறிப்பாக, சமீபத்தியத் தொற்றுநோய் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது உதவும் ஒன்று என்று மலேசியத் தேசிய ​​வங்கி (பி.என்.எம்.) தெரிவித்துள்ளது.

அதன் 2020-ஆம் ஆண்டு அறிக்கையில், முறையான நிதி நிர்வாகத்தால் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மன அமைதியைக் கொண்டிருக்கவும் முடியும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

“மாறிவரும் வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொள்வதற்கான முன் ஏற்பாடு அவசியம். சமீபத்தியத் தொற்றுநோய்களின் போது அனுபவித்தபடி, எதிர்பாராதச் சவால்கள் பல்வேறு எதிர்பாராத சூழ்நிலைகளில் நம் வாழ்க்கையை மாற்றும்,” என்று அது கூறியது.

எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளும்போது எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை நுகர்வோர் அறிந்துகொள்ள வேண்டும் என்று பி.என்.எம். அறிவுறுத்தியது.

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் உள்ள நுகர்வோர், ஆரம்பகால உதவியை நாட வேண்டும் மற்றும் அந்தந்த நிதி நிறுவனங்களுடன் அவர்களின் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்றது அது.

மாற்றாக, சிக்கல்கள் கொண்ட பயனர்கள் கடன் ஆலோசனை மற்றும் மேலாண்மை நிறுவனத்தை உதவிக்குத் தொடர்பு கொள்ளலாம், இதில் நிதி நிர்வாகம் குறித்த நடைமுறை ஆலோசனைகளும் அடங்கும்.

நிதி மேலாண்மையின் அடிப்படை கருத்துகளைப் புரிந்துகொள்வது, நுகர்வோருக்கு விவேகமான நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும், குறிப்பாக சேமிப்பு மற்றும் அவசர நிதிகளை உருவாக்குவதில்.

ஒருவர் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலான மாதச் செலவுகளுக்காகச் சேமிக்கும்போது, போதுமான இடையகம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொருள்படும் என்கிறது பிஎன்எம்.

“எங்கள் நிதி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக வீடுகள், வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்ற பெரிய கொள்முதல் செய்வதற்கு அல்லது ஒரு வணிகத்தை மேம்படுத்த விவேகமான கடன் வாங்குதலும் அடங்கும்.

“கடனுக்கு விண்னப்பம் செய்யும்போது, ​​ஒருவர் கடனின் அடிப்படைகளையும் அதன் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மட்டுமல்லாமல், ஒரு நுகர்வோராக அவரின் உரிமைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்,” என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

  • பெர்னாமா