பிரதமர் முஹைதீன் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
அம்னோ பொது மாநாடு முடிவடைந்து ஒரு நாள் கழித்து, கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு நடந்ததாக முஹைதீன் தெரிவித்தார்.
“(கூட்டத்தின் போது) 15-வது பொதுத் தேர்தலில், பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ள அம்னோ முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அமைச்சரவையில் தங்கள் நிலைப்பாடு குறித்து எனது ஆலோசனையை அவர்கள் நாடினர்.
“நான் அவர்களை அமைச்சரவையில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். இது மக்கள் மற்றும் நாட்டின் நலன்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கூறப்பட்ட ஆலோசனை.
“எனது ஆலோசனையின் பேரில், அம்னோ அமைச்சர்கள் அனைவரும் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பார்கள் என்று ஓர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அம்னோ அமைச்சர்களுடன் இந்த முடிவு எட்டப்பட்ட நிலையில், அமைச்சரவை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று முஹைதீன் மேலும் கூறினார்.
“அம்னோவைச் சேர்ந்த பல அமைச்சர்கள், தற்போது அரசாங்கத்தின் முக்கியமான பல இலாகாக்களை வைத்திருக்கிறார்கள் (கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட).
“எனவே, அவர்களின் இராஜினாமா, கோவிட் -19 பிரச்சினையைச் சமாளிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் உள்ள அனைத்து அரசாங்க திட்டங்களையும் பாதிக்கும், அதனை நான் விரும்பவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.