பேராக், சிம்மோரில் உள்ள கம்போங் குவால குவாங் விவசாயிகள் புறம்போக்கு வாசிகள் அல்ல என்று ஈப்போ மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு இலாக்காக்களின் ஆதரவோடு, விவசாயம் செய்து வந்த அரசு தரிசு நிலம், 2012-ல் புக்கிட் அனேக்கா எனும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
2019, அக்டோபர் 2-ம் தேதி, அந்தத் தனியார் நிறுவனம் விவசாயிகள் நிலத்தைக் காலி செய்ய வேண்டுமென ஈப்போ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜூலை 2-ம் தேதி, விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டுமென ஈப்போ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர், வழக்கு விசாரணை கடந்த திங்களன்று இயங்கலையில் நடந்தது.
விவசாயிகள் சார்பில் வழக்குரைஞர்கள் டாக்டர் குர்டியால் சிங் நிஜாரும் சேகரரும் வாதாடினர். எதிர்தர்ப்பினரை வழக்குரைஞர்கள் பிரதாப் சிங் மற்றும் சோங் கொக் இயு இருவரும் பிரதிநிதித்தனர்.
இரு தரப்பு வாதத்தொகுப்பினையும் செவிமடுத்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு – நீதிபதி லவ் பி லான், நீதிபதி சோ பியான் மற்றும் நீதிபதி ஹடாரியா – விவசாயிகளின் மனுவில் வாதிக்கப்பட வேண்டிய சாராம்சங்கள் இருப்பதாகவும், அவர்களின் மனுவினை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு, ஈப்போ உயர்நீதிமன்றத் தீர்ப்பினைச் செலவுத் தொகையோடு தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் உறுதுணையாக இருந்து இந்த வழக்கிற்கு உதவிய, பேராக் மலேசிய சோசலிசக் கட்சிக்கும் (பி.எஸ்.எம்) அக்கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமாருக்கும், மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை தங்களுக்காக வாதிட்ட இரு வழக்கறிஞர்களுக்கும் விவசாயிகள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.