‘லாரி ஓட்டுநர் வழக்கை மறுபரிசீலனை செய்யவும்’ – ஜே.பி.ஜே.வுக்கு வீ வலியுறுத்து

அதிகச் சுமைகளை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு எதிரான வழக்கை மறுபரிசீலனை செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் சாலை போக்குவரத்துத் துறையைக் (ஜே.பி.ஜே) கேட்டுக்கொண்டார்.

லாரி ஓட்டுநரான எஸ் ஆறுமுகம், அதிக சரக்குகளை ஏற்றிச் செல்வதால், அடிக்கடி அவருக்குச் சம்மன் வழங்கப்பட்டு, ஜே.பி.ஜே.வால் கருப்புப்பட்டியலில்  சேர்க்கப்பட்டார். இதனால் மனம்நொந்த ஆறுமுகம், சமூக ஊடகங்களில் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இதற்கிடையில், ஆறுமுகத்தின் கூற்றுப்படி, இந்த குற்றத்திற்காக முதலாளிகள் மீது குற்றம் சாட்ட வேண்டும், லாரி ஓட்டுநர் மீது அல்ல.

முகநூல் பதிவு ஒன்றில், வீ நேற்று தனது அலுவலகத்தில் எஸ் ஆறுமுகத்தைச் சந்தித்ததாகவும் அவரின் புகாரைக் கேட்டதாகவும் கூறினார்.

“நேற்றையச் சந்திப்பில், ஈப்போவைச் சேர்ந்த ஆறுமுகம், அதிகச் சுமைகளை ஏற்றிச் செல்வது தன்னுடைய விருப்பப்படி அல்ல, தனது முதலாளி அல்லது போக்குவரத்து நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரிலேயே அவ்வாறு செய்வதாகவும், ஆனால் ஜே.பி.ஜே. தனக்குப் பல சம்மன்களை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

“ஒரு லாரி டிரைவர் என்ற முறையில், அதிகச் சுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஆறுமுகமே ஏற்க வேண்டும், அவர் பணிபுரிந்த நிறுவனம் அல்ல.

“அதிகச் சுமை காரணமாக அடிக்கடி சம்மன்களைப் பெற்றதால், ஆறுமுகம் தனது உரிமத்தைப் புதுப்பிப்பதில் இருந்து ஜே.பி.ஜேவால் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

வீ கூற்றுப்படி, கருப்புப்பட்டியலின் விளைவாக, திறமையான ஓட்டுநர் உரிமம் (சி.டி.எல்), பொருட்கள் வாகன ஓட்டுநர் உரிமம் (ஜி.டி.எல்.) மற்றும் தொழில் உரிமம் இல்லாததால் ஜே.பி.ஜே. மற்றும் காவல்துறையினர் ஆறுமுகத்திற்குப் பல சம்மன்களை அனுப்பினர்.

“இதற்கு ஒரு தீர்வாக, முதலாளிகள் மீது குற்றம் சாட்டாமல், அதிகச் சுமைகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு எதிரான சம்மன் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜேபிஜே மற்றும் ஏபிஏடி-ஐ (நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனம்) நான் கேட்டுக்கொள்கிறேன்.

“சம்மன்களை ஓட்டுநரால் தீர்க்க முடியாமல் (அவரது முதலாளி அல்ல) போகும்போது, ஜேபிஜேவால் அவர்கள் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர்;  இதுபோன்ற நடவடிக்கைகள் லாரி ஓட்டுநர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன,” என்று அவர் கூறினார்.

ஜேபிஜே சட்டத்தின் கீழ், அதிகச் சுமையை ஏற்றிச் செல்லும் குற்றத்திற்காக லாரி ஓட்டுநர் மற்றும் முதலாளிக்கு எதிராக சம்மன் அனுப்பப்படுகிறது.

எவ்வாறாயினும், நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தைப் பொறுத்தவரை, சம்மன் முதலாளிக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது மற்றும் அதற்கான தண்டம் மிக அதிகமாக உள்ளது, ஏனெனில் ஏபிஏடி-யைப் பொறுத்தமட்டில் இது கடுமையான குற்றமாகும்.

இதற்கிடையில், ஐந்து வருடங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வீ ஆறுமுகத்திடம் ஒப்படைத்தார்.

“ஆறுமுகம் கண்களில் கண்ணீருடன், என் அலுவலகத்திற்கு வந்து தனது கதையைச் சொன்னார், ஐந்து வருடக் காலத்திற்குப் புதுப்பிக்கப்பட்ட அவரது ஓட்டுநர் உரிமத்தை நான் ஒப்படைத்தபோது, அவர் ஒரு பெரிய புன்னகையுடன் வீட்டிற்குத் திரும்பினார்,” என்று வீ கூறினார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பு, ஏபிஏடி தலைமை இயக்குநர் அஸ்லான் அல் பக்ரி மற்றும் ஜேபிஜே அதிகாரி ஓங் சீ தாங் ஆகியோருடன் நடைபெற்றது என்று ஆயேர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினரான வீ தெரிவித்தார்.