‘தனித்திருந்தால் அம்னோ அதிக இடங்களை இழக்கும்’ – பாஸ்

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), தனித்து போட்டியிட்டால், அம்னோ அதிக இடங்களை இழக்கக்கூடும் என்று பாஸ் கருதுகிறது.

கடந்தப் பொதுத் தேர்தலில், அக்கட்சி நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு இவ்வாறு தோன்றுவதாகப் பாஸ் உதவித் தலைவர் மொஹமட் அமர் அப்துல்லா தெரிவித்தார்.

“தற்போதைய சூழ்நிலையில், அம்னோ தனியாக போட்டியிட்டால் அதிக இடங்களை இழக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

“அதனால்தான் இந்த மூன்று கட்சிகளையும் ஒன்றாக்க நாங்கள் விரும்புகிறோம், சர்ச்சைக்குரியப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும், எங்களால் முடிந்தவரை அதற்கு முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“முந்தைய தேர்தலை ஓர் அளவுகோலாக நாம் எடுத்துக்கொள்வோம், தற்போதுள்ள தலைமைக்கு ஒரு நிராகரிப்பு இருந்தது, அதே அம்னோ தலைமை இன்னும் இருக்கிறது.

“தற்போதைய தலைமை சமீபத்தில் நிராகரிக்கப்பட்ட தலைமை,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அடுத்த ஜிஇ15-இல், தேசியக் கூட்டணியுடன் (பி.என்.) இருக்கப்போவதில்லை என்ற அம்னோவின் முடிவு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது கிளந்தான் துணை மந்திரி பெசாரான அவர் இதனைக் கூறினார்.

இதற்கிடையில், பெரும்பான்மையான அம்னோ உறுப்பினர்கள், தலைவர்களோ அல்லது சாதாரண உறுப்பினர்களோ, கட்சி பாஸ் மற்றும் பெர்சத்துவுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்று மொஹமட் அமர் தெரிவித்தார்.

“பெரும்பான்மையினர் மூன்று கட்சிகளிலும் இணைந்து இருப்பதையே விரும்புகின்றனர், இது நிலைமையை மாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம், ஒப்புக்கொள்ளாதவர்கள் வெகு சிலரே.

“அம்னோவை மறுசீரமைக்க வேண்டும், அது (அம்னோ) இப்படியேச் சென்றால், அதனால் வெகுதூரம் பயணிக்க முடியாது என்பதே எனது கருத்து,” என்று அவர் கூறினார்.

அம்னோவிற்கும் பெர்சத்துவுக்கும் இடையிலான உறவை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றார் அவர்.