முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, ‘ரொக்கம் என்பது ராஜா’ என்ற கலாச்சாரம் சமுதாயத்தையும் நாட்டையும் சேதப்படுத்தியுள்ளது, இதனால் ” கொலை செய்யவும் யாரும் தயங்குவதில்லை” என்று கூறினார்.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பணத்திற்காக தங்கள் ஆதரவை மாற்றுவது ஆச்சரியமான ஒன்றில்லை என்றார் அவர்.
“கட்சி தாவல் என்பது சாதரணமானது.
“உயரமான சுவரைக் கூட தாண்டிவிடலாம். நீங்கள் ஜி.இ.யில் போட்டியிட விரும்பினால், வெற்றிபெறப் பணத்தைப் பயன்படுத்துங்கள்.
“போதுமான பணம் இல்லையா, திருடுங்கள். பின்னர் நீங்கள் கைது செய்யப்படுவீர்களா? இல்லை, பணத்தைக் கொடுங்கள், உங்களைப் பிடிக்க மாட்டார்கள்,” என்று அவர் இன்று தனது வலைப்பதிவில் கிண்டலாக கூறினார்.
முன்னதாக, அதிகாரிகளை வைத்து அச்சுறுத்தி, கையூட்டு சலுகைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவைத் தேசியக் கூட்டணி (பி.என்.) ஈர்த்ததாக அதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஓர் ‘அரசியல் ஆயுதமாக’ மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) பயன்படுத்தப்படுகிறது என்ற பல அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அந்த ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது.
மேலும், பி.என்.னுக்கு ஆதரவைத் திரட்ட, காவல்துறை ஒரு கருவியாகச் செயல்படுகிறது என்பதனையும், உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐ.ஆர்.பி) அரசியல் நோக்கங்களுடன் தணிக்கை மற்றும் விசாரணைகள் போன்ற வரி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் அரசு இயந்திரங்களான அவை மறுத்தன.
மார்ச் 13 அன்று, கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆரை விட்டு பி.என். ஆதரவாளராக தன்னை அறிவித்தார்.
பி.கே.ஆரைச் சேர்ந்த மற்ற இரண்டு எம்.பி.க்கள் – லாரி (ஜூலாவ்) மற்றும் ஸ்டீவன் சோங் (தெப்ராவ்) – இதேபோன்று கட்சியிலிருந்து வெளியேறினர்.
இதற்கிடையில், பணத்திற்காக நாட்டின் கௌரவத்தையும் நன்மதிப்பையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளவர்களை டாக்டர் மகாதீர் இன்று கேலி செய்தார்.
“திருடாதது ஒரு முட்டாள்தனம்.
“ஒரு நாட்டை இழக்கலாம் பரவாயில்லை. இனத்தால் வெறுக்கப்படலாம் பரவாயில்லை. நான் இப்போது ஒரு கோடீஸ்வரன்.
மகாதீர், பெயரிடவில்லை என்றாலும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் நாட்டின் முதலீட்டு நிறுவனமான 1எம்.டி.பி. மோசடி ஊழலில் அவர் ஈடுபட்டதையும் கேலி செய்து பேசியதாக நம்பப்படுகிறது.
“போதுமான பணம் இல்லையா – மக்கள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதியுங்கள், நிறுவனத்தை உருவாக்குங்கள், பணத்தைக் கடன் வாங்குங்கள், உங்களைப் பாதுகாத்து கொள்ளவும் ஜி.இ.யில் வெற்றி பெறவும் போதுமான பணத்தைத் திருடுங்கள்,” என்று அவர் கூறினார்.