ம.இ.கா. : ஜிஇ15-ஐ தனித்து எதிர்கொள்வது பி.என்.னின் இறுதி முடிவல்ல

15-வது பொதுத் தேர்தல் (ஜிஇ15) குறித்த இறுதி முடிவுகள், தேசிய முன்னணி (பி.என்.) உச்ச தலைமைக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ம.இ.கா. தலைமைச் செயலாளர் எம் அசோஜன் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, பி.என். ஜிஇ15-ஐ தனித்து எதிர்கொள்ளும் என்று அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியது, அம்னோ தலைவர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட கருத்து.

“ஜிஇ15-இல், பிஎன் தனித்து போட்டியிடுமா என்பது பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

“அம்னோ பொதுக்கூட்டத்தில் பி.என். தனியாகப் போட்டியிடும் என்று ஜாஹித் கூறியது, ​அவரது தனிப்பட்ட கருத்து.

“இறுதி முடிவு, விரைவில் கூட்டப்படவுள்ள பிஎன் உச்சமன்றக் கூட்டத்தின் அடிப்படையில் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

பி.என்-ஐ வழிநடத்தும் அம்னோ, கூட்டணி அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாறுவதற்கு அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்று அஹ்மத் ஜாஹித் கூறினார்.

“பிஎன் ஜிஇ15-ஐ தனித்து எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. ஜிஇ15-க்குப் பிறகு அம்னோ மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்கு, நாம் முதலில் அதிக இடங்களை வெல்ல வேண்டும்,” என்று ஜாஹித் கூறியிருந்தார்.

இருப்பினும், அவர்கள் பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டித்துகொள்வார்கள் என்ற ஜாஹித்தின் முடிவில் ம.இ.கா. திருப்த்தி கொள்ளவில்லை என்பதை மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கவுள்ள ம.இ.கா. 74-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், கட்சி பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு பிரச்சினையைத் தொட்டு பேசும் என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

கூட்டம் கிள்ளானில் நடைபெறும், நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 2,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ள இக்கூட்டம், முதன்முறையாக நேருக்கு நேர் மற்றும் மெய்நிகரில் நடைபெறவுள்ளது.

பாரம்பரியமாக, பி.என். தலைவர் என்ற வகையில், அம்னோ தேசியத் தலைவர் ம.இ.கா. ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.