பிரதமராக யாருக்கும் தற்போது பெரும்பான்மை ஆதரவு இல்லை – கிட் சியாங்

தற்போதைக்குப் பிரதமர் வேட்பாளருக்குப் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக, எந்தவொரு நபரும் கூற முடியாது என்று டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

அம்னோ தனது வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில், பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளப் போவதாக அறிவித்ததை அடுத்து, அதே நேரத்தில், பெர்சத்துவும் பாஸ்-உம் தேசியக் கூட்டணியில் (பிஎன்) தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியளித்ததைத் தொடர்ந்து லிம் இதனைக் கூறினார்.

“மலேசியா இதுவரை காணாத ஓர் இக்கட்டான அரசியல் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது, பிரதமராக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவு யாருக்கும் இல்லை.

“முஹைதீன் யாசின், மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத முதல் பிரதமர் ஆவார்.

“இதன் காரணமாக, கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது,” என்று நேற்று இரவு, ஜொகூர், ஸ்கூடாயில் நடந்த டிஏபி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், எதிர்க்கட்சி முன்னோக்கிச் செல்ல வேண்டும், மக்களின் இலட்சியவாதத்தை வலுப்படுத்த வேண்டும், தேர்தல் இயந்திரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியது மகிழ்ச்சி தருவதாக லிம் கூறினார்.

“பக்காத்தான் ஹராப்பான் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ) கவனம் செலுத்த வேண்டும், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன்னர், பிரதமராக எந்தக் கட்சியால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியும் என்ற கேள்வியைச் சுற்றிய “எண்கள் விளையாட்டை” விட்டுவிட வேண்டும்,” என்று அவர் கூறினார். .

14-வது பொதுத் தேர்தலில், பாஸ் போட்டியிட்ட 158 நாடாளுமன்ற இடங்களில் 18 இடங்களை வென்றது.

121 நாடாளுமன்ற இடங்களில், அம்னோ 54-ல் வெற்றி பெற்று, அதிக இடங்களை வென்ற ஒற்றைக் கட்சியாக மாறியது.

இருப்பினும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அதன் எம்.பி.க்கள் பெர்சத்துவிற்குத் தாவியதை அடுத்து, அம்னோ 15 இடங்களை இழந்தது.

இப்போது நாடாளுமன்றத்தில், தேசிய முன்னணி 42 இடங்களைக் கொண்டுள்ளது, அதில் 38 அம்னோவுக்குச் சொந்தமானது.