வாக்கு18 ஒத்திவைப்பு, 18 இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு பதிவு

18 முதல் 20 வயதிற்குட்பட்ட மொத்தம் 18 இளைஞர்கள், வாக்களிக்கும் வயதை 18-ஆக (வாக்கு18) மாற்றும் அமலாக்கத்தைத் தாமதப்படுத்தியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர விரும்புகிறார்கள்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், பிரதமர், மலேசிய அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம் (இ.சி.) ஆகியோருக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு செய்யப்போவதாக இளம் வாக்காளர் சங்கத்தின் வாக்கு18 குழு தெரிவித்துள்ளது.

வாக்கு18-ஐ ஒத்திவைப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பகுத்தறிவற்றது, சட்டவிரோதமானது, நியாயமற்றது மற்றும் வாக்காளர் உரிமை மீறல் என்று நீதிமன்ற அறிவிப்பை அவர்கள் நாடுகின்றனர்.

18 முதல் 20 வயதுடைய வாக்காளர்களுக்கு, ஜூலை 2021-க்குள் வாக்களிக்கும் உரிமை உண்டு என்ற அறிவிப்பையும், ஒத்திவைப்பை இரத்து செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றத்தை அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

இது, இன்று கோலாலம்பூரில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பிலும் செய்தி அறிக்கையின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டது.

“வாக்கு18 (இளம் வாக்காளர் சங்கம்) 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்பதில் உறுதியாக உள்ளது,” என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட இளைஞர்களில் இளம் ஆர்வலர்கள் நூருல் ரிஃபயா, 18, ரிஃப்கி ஃபைசல், 18 மற்றும் எலிசா ஷஃபிக்கா, 19 மற்றும் லிம் யூ கின், 18 ஆகியோரும் அடங்குவர்.