பெரும்பாலான ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டால் பள்ளிகள் மூடப்படும் – ராட்ஸி

கோவிட்-19 தொற்றுகளைப் புகாரளிக்கும் பள்ளிகள், பள்ளி நடவடிக்கைகளின் செயல்திறனைப் பாதிக்கும் வகையில் பெரும்பாலான ஆசிரியர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார்.

பள்ளி மூடல் முடிவு, மாவட்டச் சுகாதார அலுவலகம் (பி.கே.டி) நடத்தும் இடர் மதிப்பீட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றார்.

சில வகுப்புகள், சில தளங்கள் அல்லது சில கட்டிடங்கள் மூடப்பட வேண்டும் என்று பி.கே.டி. அறிவுறுத்தியிருந்தால், சம்பந்தப்பட்ட அப்பிரிவுகளை மட்டுமே மூடல் உள்ளடக்கும் என்றார் அவர்.

“இருப்பினும், பெரும்பாலான ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், பள்ளி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும் என்று கண்டறியப்பட்டால், பள்ளி நடவடிக்கைகளைத் தொடர முடியுமா அல்லது ஒத்திவைக்க வேண்டுமா என்பதை அமைச்சு தீர்மாணிக்கும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, கோவிட்-19 தொற்றுகளைப் புகாரளித்தப் பள்ளிகளை மூடும் நடவடிக்கை எடுக்குமாறு, பினாங்கு மாநில அரசு கடுமையான அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-பெர்னாமா