எம்.பி. : வாக்கு18-ஐ அரசாங்கம் நிராகரிக்கக்கூடாது

வாக்களிக்கும் வயது வரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரீம் கூறினார்.

“வாக்கு18 பிரச்சினையை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் தேர்தல் ஆணையத்திடம் (இசி) வீசுகிறது, பி.என். அரசாங்கம் மற்ற தரப்பினரிடம் அதனை தள்ளிவிட முடியாது.

“இது செயல்படுத்தப்பட வேண்டிய, நாடாளுமன்ற முடிவுகளை மரபுரிமையாகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கத்தின் கீழ், 2019-ஆம் ஆண்டில், மக்களவையில் வாக்கு18 கொள்கை ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது என்று அந்த பி.கே.ஆர். பிரதிநிதி கூறினார்.

“தேசியக் கூட்டணி அரசாங்கம் இப்போது கிட்டத்தட்ட வரம்பற்ற சக்திகளைக் – அவசரகாலச் சட்டத்தின் கீழ் – கொண்டுள்ளது, மனம் உண்டானால் மார்க்கம் உண்டு,” என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காரணமாக, அதன் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வாக்கு18 மற்றும் தானியங்கி பதிவு திட்டங்களை 2022 செப்டம்பர் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

முன்னதாக, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுட்டின் ஹசான் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

வாக்காளர் பதிவை 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு நீட்டிக்க முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.

ஹசானின் கூற்றுப்படி, இது அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்) திட்டத்திற்கு ஒத்ததாகும்.

“பிரதமர் நஜிப் ரசாக் தலைமையில், தேசிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது, இந்தத் திட்டம் தொடங்கியது. தேசிய முன்னணி விழுந்து, பி.எச். ஆட்சிக்கு வந்தபோது, ​​மகாதீர் முகமது தலைமையிலான பி.எச். அரசாங்கம் எச்எஸ்ஆர் திட்ட ஒப்பந்தத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது.

“பி.எச். அரசாங்கம் சரிந்தபோது, தேசியக் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து அத்திட்டத்தை மேற்கொண்டது. மஹியாட்டின் முஹமட் யாசின் (முஹிட்டின் யாசின்) தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் எச்எஸ்ஆர் திட்டத்தை இரத்து செய்தபோது, ​​தேசியக் கூட்டணி அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு RM320 மில்லியன் இழப்பீட்டைச் செலுத்த வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.

நேற்று, ஜொகூர் பாருவில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்தின் வாக்கு18 மற்றும் தானியங்கி முறையிலான வாக்குப் பதிவு ஒத்தி வைப்புக்கு எதிராக அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.