பெர்சத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, தேசிய முன்னணி உச்சமன்றத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் வரையில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ளதாக ம.இ.கா. இன்று அறிவித்தது.
இன்று, கிள்ளானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் 74-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவர் எஸ் விக்னேஸ்வரன் தனது கொள்கை உரையில், இயங்கலையில் ஸூம் செயலி வழியாக மாநாட்டில் கலந்துகொண்ட முஹைதீனுக்கு நன்றி தெரிவித்தார்.
“கடந்த வாரம், அம்னோ பெர்சத்து உடனான உறவை அடுத்த ஜி.இ.யில் முடித்து கொள்ள முடிவு செய்தது. ம.இ.கா.வைப் பொறுத்தவரை, பாரிசான் நேஷனல் ஒற்றுமை அடிப்படையிலான முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
இருப்பினும், மஇகா தற்போது முஹைதீன் யாசின் தலைமையை ஆதரிக்கும், மேலும், தேசிய முன்னணி உச்சமன்ற முடிவில் ஒரு புதிய முன்னேற்றம் வரும் வரை பெர்சத்துவுடன் இணைந்து செயல்படும்.
“விரைவில் களம் காணவுள்ள, எதிர்காலத்திற்கான அரசியல் இயக்கத்தைக் காத்திருந்து பார்ப்போம்,” என்று அவர் சொன்னார்.
அதே நேரத்தில், அம்னோ மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையையும் விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார்.
“நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன், 40 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் விரோதமாக இருந்தபோதிலும், அம்னோ மற்றும் பாஸ் தங்கள் பிரச்சினைகளைப் புதைத்ததைப் போலவே, அம்னோ மற்றும் பெர்சத்து தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், தனது பங்காளியான தேசிய முன்னணியால் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், ம.இ.கா.வுக்கு அமைச்சர் பதவியைத் தேசியக் கூட்டணி வழங்கியது என விக்னேஸ்வரன் தனது உரையில் கூறினார்.
அதேபோல், தேசிய முன்னணி ம.இ.கா. தலைவர்களைத் துணை அமைச்சர் அல்லது செனட்டர் பதவிகளுக்கும் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“இருப்பினும், நாங்கள் இன்னும் தேசிய முன்னணியில் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
மசீச தலைவர் வீ கா சியோங்கும் இன்று ம.இ.கா. தலைவர்களுடன் பிரதான மேடையில் அமர்ந்திருந்தார்.
இதற்கிடையில், அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் தலைவரான அஹ்மத் ஜாஹித் ஹமிடி இயங்கலையில் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.
ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன், அம்னோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டால், அடுத்த ஜி.இ.யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சியாக மாறக் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்றார்.