அடுத்தப் பொதுத் தேர்தலில், பாரிசான் நெசனல் கூட்டணியின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க, அம்னோ குறைந்த பட்சம் 10 விழுக்காடு இடங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று, மஇகா 74-ஆவது ஆண்டு மாநாட்டில், தனது கொள்கை உரையில், அடுத்த ஜி.இ.யில் பல இடங்களைத் தியாகம் செய்ய அம்னோ முன்பு ம.இ.கா.வைக் கேட்டதாக விக்னேஸ்வரன் கூறினார்.
“ம.இ.கா.வுக்கு ஒன்பது நாடாளுமன்ற இடங்கள் மட்டுமே உள்ளன (ஜிஇ14-இல் போட்டியிட்டவை) அதில் 35 விழுக்காடு இடங்களைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம்.
“ம.இ.கா.வுக்கு அம்னோவின் முந்தைய அறிவுரை இதுவென்றால், அம்னோவும் குறைந்தது 10 விழுக்காடு இடங்களை (ஜிஇ14-இல் போட்டியிட்ட 121 இடங்களில்) தியாகம் செய்யத் தயாராக இருப்பதில் என்ன தவறு?” என்று அவர் இன்று கிள்ளானில், கிட்டத்தட்ட 400 பிரதிநிதிகளிடம் கூறினார்.
அடுத்த ஜி.இ.யில் வெற்றியை உறுதி செய்ய, தேசிய முன்னணி மற்றும் தேசியக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும், ஒருவருக்கொருவர் மோதல்களைத் தவிர்ப்பதற்குத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
அதன்பிறகு, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன், முந்தைய பல ஜி.இ.க்களைப் போலவே, ஐ.பி.எஃப். போன்ற பல இந்தியக் கட்சிகளுக்கும் இடங்களை விட்டுக்கொடுக்குமாறு ம.இ.கா.வுக்கு அம்னோ அழைப்பு விடுத்ததைக் குறிப்பிடுவதாகக் கூறினார்.
“எனது உரையில், புதிய கட்சிகளைக் கொண்டுவருவதன் மூலம் கூட்டணியை வலுப்படுத்த தேசிய முன்னணியின் நோக்கத்தை நான் சொன்னேன், இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை இந்தியச் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு முன்பு நாங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை (இந்த விஷயத்தைப் பற்றி).
“கடந்த சில ஜி.இ.க்களில், இடங்களின் அதிகரிப்பு எதுவும் இல்லை (இந்தியக் கட்சியால் வென்றது). அதனால்தான் நாங்கள் தேசிய முன்னணியை வலுப்படுத்த விரும்பி, பெர்சத்துவுடன் ஒத்துழைப்பது சிறந்தது என்று சொல்கிறேன்,” என்று அவர் கூறினார்.
கடந்த வாரம் அம்னோ தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஜிஇ15-இல் பெர்சத்துவுடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்ற முடிவை எடுத்தது. ஆனால், தேசிய முன்னணியின் மற்ற உறுப்புக் கட்சிகளான ம.இ.கா., மசீச மற்றும் பெர்சத்து ரக்யாட் சபா கட்சி ஆகியவைத் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான், அடுத்த ஜி.இ.யில், முன்பு போட்டியிட்ட எந்த இடங்களையும் அம்னோ விட்டுக் கொடுக்காது என்றார்.
அம்னோ தலைமைச் செயலாளர் அஹ்மத் மஸ்லான், 2018 ஜி.இ.யில் வென்ற அனைத்து இடங்களிலும் கட்சி மீண்டும் போட்டியிடும், தற்போது பெர்சத்துவுக்குத் தாவிய அம்னோ வேட்பாளர்கள் இடங்கள் உட்பட என்றார்.
“அம்னோவும் பெர்சத்துவும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், அம்னோ மற்றும் பாஸ் இடையிலான பிரச்சினைகளைப் புதைப்பது போல.
“தேசிய முன்னணி தலைமை, தேசியக் கூட்டணியுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவது முக்கியம், அரசாங்கக் கட்சிகளுக்கு இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது முக்கியம், குறிப்பாக தேர்தல் இடங்களை விநியோகிப்பதில்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், அரசாங்கத்தில் இந்தியச் சமூகத்திற்குப் போதுமான உத்தரவாதம் அளிக்குமாறு விக்னேஸ்வரன் தேசிய முன்னணி தலைமைக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ம.இ.கா.வுக்கு நியாயமான இடங்களை ஒதுக்குவதன் மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
“நாட்டின் முன்னேற்றத்தில் நமது சமூகம் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த, ம.இ.கா. எங்கள் பாரம்பரிய இடங்களையும், அரசியல் உண்மைகளின் அடிப்படையில் புதிய இடங்களையும் அடிமட்டத்தில் பெறுவது முக்கியம்.
“நான் சொல்வது, வெல்லக்கூடிய ஓர் இருக்கை. நிச்சயமாக (ம.இ.கா.) தோற்கக்கூடிய ஓர் இடத்தை கொடுத்து எங்களை அவமதிக்க முயற்சிக்காதீர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜிஇ14-இல், ம.இ.கா. ஒன்பது நாடாளுமன்ற இடங்களிலும், 18 சட்ட மன்றங்களிலும் போட்டியிட்டது. கட்சி இரண்டு நாடாளுமன்ற இடங்களையும் மூன்று மாநில இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.