இந்திய சமூகத்தின் நலனுக்காக, அரசியல் ஒத்துழைப்பு குறித்து தனது சொந்த முடிவுகளை எடுக்க கட்சிக்கு உரிமை உண்டு என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று வலியுறுத்தினார்.
தேசிய முன்னணி உச்சமன்றத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கும் வரையில், பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம் என்ற மஇகாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“தேசியக் கூட்டணியின் ஓர் அங்கமான பாஸ்-உடன் அம்னோ பணியாற்ற முடிந்தால், நாங்கள் ஏன் பெர்சத்துவுடன் வேலை செய்ய முடியாது?
“நான் முன்பு கூறியது போல், பெர்சத்துவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற அம்னோவின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
“ஆனால், தேசிய முன்னணி மட்டத்தில் எந்தவொரு இறுதி முடிவும் எடுப்பதற்கு முன்னர், ம.இ.கா. பெர்சத்துவுடன் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் தொடரும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இதற்கிடையில், அரசியல் கட்சிகளின் கூட்டணியைத் தேர்ந்தெடுப்பது உட்பட, ஜிஇ15 குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்க, கட்சியின் மத்தியச் செயற்குழுவுக்கு (சி.டபிள்யூ.சி) ஆணை வழங்கும் தீர்மானத்திற்கு ம.இ.கா. பிரதிநிதிகள் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர்.
இந்தப் பிரேரணை – இன்றையக் கூட்டத்தில் ஒரே பிரேரணையாக இருந்தது – ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணன் அவர்களால் முன்மொழியப்பட்டது.
மத்தியச் செயற்குழு அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும், பொதுக் கூட்டத்திலிருந்து அறிவுறுத்தல்களைப் பெற வேண்டும் என்று கட்சி அரசியலமைப்பின் 48-வது பிரிவின் அடிப்படையில் இந்தப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது என்றார் அவர்.
மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார மற்றும் சமூக நலன்களைப் பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் கட்சி அரசியலமைப்பின் பிரிவு 6.3-இன் படி, இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், வழங்கப்பட்ட ஆணையினால் ம.இ.கா. ஆலோசிக்காமல், உடனடியாக முடிவெடுக்காது என்றார்.
“இன்று வழங்கப்பட்ட ஆணை, எதிர்காலத்தில் கட்சியின் திசையைத் தீர்மானிக்க மத்தியச் செயற்குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரம்.
“தேசிய முன்னணி மட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகுதான், கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் தீர்மானிப்போம்,” என்று அவர் கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனுடன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இன்று முன்னதாக, கட்சியின் 74-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், சிறப்பு உரை நிகழ்த்த, மஇகாவின் அழைப்பைப் பிரதமர் முஹைதீன் யாசின் ஏற்றுக்கொண்டார்.
தொலை தொடர்பு மூலம் உரை நிகழ்த்திய முஹைதீன், தேசியக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் ம.இ.கா. “சரியான மற்றும் பகுத்தறிவுடன்” முடிவு எடுத்துள்ளதாக அவர் விவரித்தார்.