பெர்சத்து : வாக்கு18-ஐ இ.சி. உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்

18 வயதில் வாக்களிக்கும் தகுதி தொடர்பான அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா 2019-இன் திருத்தங்களை, விரைவாக செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்குப் (இ.சி.) பெர்சத்து அழைப்பு விடுத்தது.

அரசியலில் இளைஞர்களின் பங்கு மற்றும் ஈடுபாட்டை அங்கீகரிக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று, பெர்சத்து தலைமைச் செயலாளர் ஹம்சா ஜைனுட்டின் கூறியதாக பெர்னாமா மேற்கோள் காட்டியுள்ளது.

“அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் இளைஞர்களின் பங்கு மற்றும் செயல்பாட்டைக் கட்சி அங்கீகரிக்கிறது என்பதைப் பெர்சத்து உச்சமன்றத் தலைமைக் குழு (எம்.பி.தி.) வலியுறுத்துகிறது,” என்று நேற்று கட்சியின் எம்.பி.தி. கூட்டத்தைத் தொடர்ந்து அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மக்களவை  மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராவுதல் மற்றும் வாக்களிக்கும் வயது வரம்பு ஆகியவற்றை 18-ஆகக் குறைப்பது மற்றும் 18 வயதில் வாக்காளராகத் தானியங்கி பதிவு செய்தல் ஆகியவற்றில் அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

வாக்கு18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு, கடந்தப் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தைக் கையகப்படுத்திய பின்னர், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) திட்டமிட்டு, வரைவு செய்து முன்மொழிந்தது.

கடந்த 2019, ஜூலை 16-ல், 222 எம்.பி.க்களில் 211 பேரின் ஆதரவைப் பெற்ற அது, பத்து நாட்களுக்குப் பிறகு செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பெர்சத்துவைச் சார்ந்த ரைஸ் யாத்திம், அதைச் செயல்படுத்த அதிக காலம் தேவை என்று கூறியதைத் தொடர்ந்து, ​​திட்டத்தின் நிலை கேள்விக்குறியாக மாறியது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கானி சல்லே, வாக்கு 18 செப்டம்பர் 1, 2022-க்குப் பிறகுதான் செயல்படுத்தப்படும், ஏனெனில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையால் (பி.கே.பி.) அவற்றின் ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, பல எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க எம்.பி.க்களும் இ.சி.யின் ஒத்துவைக்கும் முடிவை எதிர்த்தனர். கூட்டாட்சி அரசியலமைப்பையும் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இளைஞர்களுக்கான உரிமைகளையும் மதிக்கும் பொருட்டு அதன் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

பொதுத் தேர்தல் 2023-க்கு முன்பாக நடத்தப்பட வேண்டும். ஆயினும், தற்போதைய நிலை அதைவிட முன்னதாக நடக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.