அமைச்சர் : மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்ற அரசாங்கம் அனுமதிக்காது

கடந்த மாதப் பிற்பகுதியில், அமெரிக்காவில் இருந்து நெகிழிக் கழிவு பொருட்கள் கொண்ட கொள்கலன்கள் நாட்டில் நுழைந்ததைத் தொடர்ந்து, விதிகளைப் பின்பற்றாத மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட, குப்பைகளின் வடிவத்தில் கழிவுகள் நாட்டுக்குள் நுழைவதில் அரசாங்கம் சமரசம் ஆகாது என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு (காசா) வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்ற அனுமதிக்கக்கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கை என அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மேன் கூறினார்.

“விதிகளைப் பின்பற்றாதக் கழிவுகள் உட்பட, அனுப்பப்படும் எந்தவொருக் கழிவுகளும் அந்தந்த நாட்டிற்கேத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், மறுசுழற்சி தொழிலுக்குச் சுத்தமான நெகிழி போன்ற கழிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பொறுப்பான தரப்பினர் வகுத்துள்ள குறியீட்டின் படி இருப்பதாகவும் அவர் கூறினார்.

சுத்தமாக இருப்பதாகக் கூறி, பாலிதிலேனா நெகிழி கழிவுப் பொருட்களைக் கொண்டிருந்த அமெரிக்காவின் கொள்கலன்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கியது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

சமூக ஊடகங்களில் இது தொடர்பான விமர்சனங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், காசா முன்பு நெகிழி கழிவுகள் சுத்தமாகவும், ஒரேவிதமானதாகவும், இறக்குமதியாளருக்கு நெகிழி கழிவு இறக்குமதி உரிமத்தில் (அங்கீகரிக்கப்பட்ட அனுமதி அல்லது ஏபி) தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்ததாகவும் விளக்கியது.

இதற்கிடையில், துவான் இப்ராஹிம் தனது தரப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சேர்ந்து கிள்ளான் துறைமுகத்தில் கப்பல் நுழைவதை கண்காணித்ததாக் கூறினார்.

“நாங்கள் கொள்கலனை நிறுத்துமாறு துறைமுகத்திடம் கேட்டு, ஓர் ஆய்வு செய்தோம், கொள்கலனில் உள்ளவை விளம்பரப்படுத்தப்பட்டது போல் அல்ல என்பது தெரிந்தது, இறக்குமதி செய்யும் தரப்பினர், விதிமுறைகளைப் பின்பற்றியுள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.