நாட்டின் முனைமுகப் பணியாளர்கள் வரிசையின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டிய ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று, இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியது.
கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து உள்ள குழுவினர் என்பதால், தடுப்பூசி ஆசிரியர்களுக்கு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.
நேற்று முதல், பள்ளி அமர்வுகள் முழுமையாக திறக்கப்பட்டதால், கிட்டத்தட்ட 500,000 ஆசிரியர்கள் தங்கள் அன்றாட பணிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.
“மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், கல்வியின் தொடர்ச்சியையும் நாட்டின் எதிர்காலத்தையும் உறுதி செய்வதற்காக ஆசிரியர்களும் நம் குழந்தைகளைக் கவனிப்பதில் முன்னணியில் உள்ளனர்.
“எங்களுக்குத் தெரிந்தவரை, கோவிட் -19 தொற்றால் ஆசிரியர்களும் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது,” என்று அவர்கள் கூறினர்.
“இந்த யதார்த்தத்தை உணர்ந்து, பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியினர் நாங்கள், ஆசிரியர்களுக்குக் கூடிய விரைவில் தடுப்பூசிகளை வழங்க கல்வி அமைச்சுடன் இணைந்து பணியாற்றுமாறு மலேசிய சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கல்விக்குழு தலைவரும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லீ மாலிக், பி.கே.ஆர். கல்வி செய்தித் தொடர்பாளர் நிக் நஸ்மி நிக் அகமது, தியோ நி சிங் (டிஏபி கல்வி செய்தித் தொடர்பாளர்), ஹசான் பஹாரோம் (அமானா கல்வி செய்தித் தொடர்பாளர்), சையத் சடிக் (முடா தலைவர்), அமிருட்டின் ஹம்சா (பெஜுவாங் பொதுச் செயலாளர்), இஸ்னைராசா முனிரா (வாரிசான் மகளிர் தலைவர்) மற்றும் வில்ஃபிரட் மடியஸ் தங்காவ் (உப்கோ தலைவர்) ஆகியோர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஒத்திவைப்பது, பலரைத் தொற்றுநோய்க்கு ஆளாக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
“ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஒத்திவைப்பது, ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
“எனவே, ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துங்கள்,” என்று அவர்கள் கூறினர்.