`நஸ்லானின் தீர்ப்பைக் கண்ணியமான விவரிக்க வேண்டும்` – ஷாஃபியிக்கு நீதிபதி ஆலோசனை

மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலியின் தீர்ப்பை விவரிக்கும் வாதங்களை முன்வைக்கும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நஜிப் ரசாக்கின் தலைமை வழக்குரைஞர், முஹம்மது ஷாஃபி அப்துல்லாவிடம் இன்று கேட்டுக்கொண்டது.

“அவர் (மொஹமட் நஸ்லான்) எங்குத் தவறு செய்தார் என்பதைக் காட்ட தயவுசெய்து கண்ணியமான சொற்களைப் பயன்படுத்தவும்.

“`திறமையற்ற` மற்றும் `விஷத்தனமான தீர்ப்பு` போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை,” என்று நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜலீல் கூறினார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தண்டனையை ஒதுக்கி வைக்க, முன்னாள் பிரதமரின் முறையீட்டைக் கேட்ட மூன்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கு அப்துல் கரீம் தலைமை தாங்கினார்.

மொஹமட் நஸ்லான், இதற்கு முன்னர் நஜிப் மீது சுமத்தப்பட்ட ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளைச் செவிமடுத்த நீதிபதி ஆவார்.

நஜிப்பிற்கு எதிரான மொஹமட் நஸ்லானின் தீர்ப்பை ஒதுக்கி வைப்பதற்கான விண்ணப்பத்தில். தனது வாதங்களை முன்வைத்த போது ஷாஃபி அவ்வாறான சொற்களை வெளிப்படுத்தினார்.

மொஹமட் நஸ்லானின் தீர்ப்பு பற்றி பேசும்போது, “சட்டத்தில் தவறு” மற்றும் “தவறான திசை” போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தலாம் என்று அப்துல் கரீம் ஷாஃபியிடம் கூறினார்.