பணிநீக்கம் செய்யப்பட்ட 2,000 தொழிலாளர்களை மீண்டும் அழைக்க ஏர்ஏசியா சபதம்

கோவிட் -19 தொற்றின் தாக்கத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தனது ஊழியர்களை, விமான நிறுவனத்தின் வணிகம் மீட்கப்படும்போது திரும்பப் பணிக்கமர்த்த ஏர் ஏசியா குழுமம் இலக்கு வைத்துள்ளது.

சுமார் 2,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததற்கான முடிவை ஒரு சோகமான தருணம் என்று ஒப்புக்கொண்ட அதே வேளையில், அக்குறைந்தக் கட்டண விமானச் சேவையின் திறனில் நம்பிக்கை கொண்டு, மீண்டும் தனது பணியாளர்களை வேலைக்கமர்த்த, அக்குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் உறுதியளித்தார்.

“2,000 ஊழியர்களை இழந்தத எங்களுக்கு ஒரு சோகமான நிகழ்வு. எனவே, ஓய்வு பெறுவதற்கு முன்பு, அவர்கள் அனைவரையும் திரும்ப வேலைக்கு அழைப்பதை நான் உறுதி செய்ய வேண்டும்.

“இது எனது இலக்கு, உண்மையில் விமானச் சேவைகள் மீண்டும் செயல்படும்போது மற்றும் இந்தக் குழுவின் பிற வணிகங்களால் ஆதரிக்கப்படும் போது இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் ஏசியா மற்றும் அதன் நீண்ட தூரப் பயணப் பங்காளியான ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவை, அதன் 24,000 தொழிலாளர்களில் சுமார் 10 விழுக்காட்டினரைப் பணிநீக்கம் செய்தது.

ஏர் ஏசியாவின் இருப்பு நிர்வாக மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது, இது ஊழியர்களுக்கு வேலைகளை நகர்த்துவதை எளிதாக்கியது என்று டோனி கூறினார்.

“பெண் விமானிகளைக் கொண்ட முதல் விமான நிறுவனம் நாங்கள் (ஆசியான்), இது ஆசியான் வரலாற்றில் இதுவரை செய்யப்படாத ஒன்று.

“எனவே, ஏர் ஏசியாவின் கலாச்சாரம் மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது, அதுவும் எங்கள் திறமைகளில் ஒன்றாகும். எங்களிடம் சொந்தத் தொழிற்சங்கம் உள்ளது – இது மற்ற உலக விமான நிறுவனங்களிடம் இல்லாத ஒன்று,” என்றும் அவர் கூறினார்.

-பெர்னாமா