திவால் அறிவிப்பை எல்.எச்.டி.என். நஜிப்பிடம் ஒப்படைத்தது

நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டு வருவாய் வாரியத்திடம் (எல்.எச்.டி.என்.) இருந்து நேற்று திவால் அறிவிப்பைப் பெற்றதாக அந்த அரசியல்வாதிக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்தது.

இந்த அறிவிப்பு நஜிப்பிடமிருந்து எல்.எச்.டி.என்.-க்கு தேவைப்படும் RM1.7 பில்லியன் வரி தொடர்பானது.

எல்.எச்.டி.என். அதிகாரிகள், நேற்று நஜிப்பின் இல்லத்திற்கு வந்து அவருக்குத் தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் வழங்கியதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

“கோலாலம்பூர் நீதிமன்றத்தில், வழக்கு நிர்வாகத்திற்காக மே 5-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஜூன் 2019-ல், முன்னாள் பிரதமரிடமிருந்து RM1.69 பில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கோருவதற்காக, தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து வருடாந்திர வட்டி விகிதம் ஐந்து விழுக்காட்டுடன், நீதிமன்றத்தால் பொருத்தமானதாகக் கருதப்படும் பிற செலவுகள் மற்றும் நிவாரணங்கள் உட்பட, அரசாங்கம் எல்.எச்.டி.என். மூலம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

மதிப்பீட்டு அறிவிப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள், நஜிப் 2011 முதல் 2017 வரையிலான வருமான வரியைச் செலுத்த தவறிவிட்டதாக அரசாங்கம் தனது உரிமைகோரல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதனால், ஒவ்வொரு ஆண்டும் கடனின் அளவு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

எல்.எச்.டி.என். தலைமை இயக்குநர் சபின் சமிதாவைத் தொடர்பு கொண்டபோது, அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

மலேசியாகினி நஜிப்பின் உதவியாளர்கள் மூலம், அவரைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தில் கருத்தறிய முயல்கிறது.